கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் ஊக்கத் தொகை... முதல்வர் ஸ்டாலின் கௌரவிப்பு..!
ஆசிய கபடி போட்டியில் தங்கம் வென்ற கார்த்திகா மற்றும் அபினேஷ் ஆகியோருக்கு தலா 25 லட்ச ரூபாய் பரிசு தொகையை முதல்வர் வழங்கினார்.
பாரம்பரிய விளையாட்டான கபடியில் இந்தியாவின் ஆதிக்கம் தொடர்ந்து நிலைத்திருக்கிறது. 2025 ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் (Asian Youth Games 2025) கபடி போட்டியில், இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இரண்டும் தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றுள்ளன. இந்த இரட்டைத் தங்க வெற்றி, இந்தியாவின் இளம் வீரர்களின் திறமையையும், அணியின் ஒற்றுமையையும் உலக அரங்கில் பதிவு செய்துள்ளது.
இந்தப் போட்டிகள், பஹ்ரைனின் ரிஃபா நகரில் உள்ள இஸா ஸ்போர்ட்ஸ் சிட்டி அரங்கில் நடைபெற்றன.அங்கு இந்திய வீரர்கள் ஆதிக்கத்தைப் பிரதிபலித்தனர்.ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள், 14 முதல் 18 வயது வரையுள்ள இளைஞர்களுக்கான முக்கியமான சர்வதேச நிகழ்வாகும்.
மேலும் 222 இந்திய வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். கபடி போட்டிகள் அக்டோபர் 23 அன்று தொடங்கி, 31 வரை நீடிக்கும் இந்த விளையாட்டுப் போட்டிகளில், இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இளையோர் விளையாட்டு கபடி போட்டியில் தமிழக வீராங்கனை கார்த்திகா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதையும் படிங்க: கபடிப் போட்டியில் தங்கம்..! தாயகம் திரும்பிய கார்த்திகாவுக்கும், அபினேஷுக்கும் உற்சாக வரவேற்பு...!
ஆடவர் விளையாட்டு பிரிவில் அபினேஷ் மோகன் தாஸ் என்பவர் இந்திய அணையில் இடம் பெற்று தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கம் வென்றுள்ளார். தங்கம் வென்ற கார்த்திகாவும், அபினேஷும் சென்னை திரும்பினார். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. தங்கப்பதக்கங்கள் வென்ற கார்த்திகாவும், அபினேஷும் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து கார்த்திகா மற்றும் அபினேஷ் ஆகிய இருவருக்கும் தலா 25 லட்ச ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. முதலமைச்சர் சார்பில் 15 லட்சமும், விளையாட்டுத்துறை சார்பில் 10 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ் மண்ணுக்கும் இனத்துக்கும் பெருமை... கபடிப்போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக்கு சீமான் வாழ்த்து...!