இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.. 4 மாதங்களுக்கு மோடி இப்படித்தான் பேசுவார்! கார்த்தி சிதம்பரம் எம்.பி கிண்டல்!
தமிழகத்தில் இந்தியா கூட்டணி வலுவாக இருப்பதால், பிரதமர் மோடியின் தமிழ் கலாச்சாரப் பேச்சுகள் எவ்வித அரசியல் லாபத்தையும் தராது என கார்த்தி சிதம்பரம் எம்.பி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது. பிரதமர் மோடி இங்கு வந்து தமிழ் உணவுகளைப் பற்றியும், திருக்குறளைப் பற்றியும் பேசுவதால் அவருக்கு எந்தச் சாதகமும் ஏற்படப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சி, தற்போது திமுகவுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தமிழ்நாட்டில் ‘இந்தியா’ கூட்டணி ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது என்றார்.
பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்து விமர்சித்த அவர், பிரதமர் தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் இட்லி, தோசை, புளி சாதம் பிடிக்கும் என்பார். பாரதியார் பாடல்களும், திருக்குறளும் பிடிக்கும் என்று பேசுவார். இன்னும் நான்கு மாதங்களுக்கு அவர் இதே பாணியில்தான் பேசுவார். ஆனால், தமிழக மக்கள் இதனை உணர்ந்துள்ளனர், இதனால் அவருக்கு எந்த வாக்குச்சீட்டு அறுவடையும் கிடைக்கப்போவதில்லை எனச் சாடினார்.
இதையும் படிங்க: அனைவருக்கும் நல்ல ஆரோக்கியமும், நலமும் கிடைக்கட்டும்..!! பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து..!!
திரைப்படங்கள் மற்றும் அரசியல் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த கார்த்தி சிதம்பரம், “பராசக்தி திரைப்படத்தை ஒரு திரைப்படமாகவே பார்க்க வேண்டும். அதில் சொல்லப்பட்டிருக்கும் அரசியல் படக்குழுவைச் சார்ந்தது; அதனை அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகக் கூடாது. அதேபோல், ஜனநாயகன் பட விவகாரத்தில் நீதிமன்றத் தீர்ப்பு என்னவோ அதன்படி நடவடிக்கைகள் இருக்கும் என்றார்.
த.வெ.க தலைவர் விஜய் சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானது குறித்த கேள்விக்கு, கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரியவர் விஜய் என்பதால், அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இருப்பினும், அவர் சிபிஐ அதிகாரிகளிடம் என்ன விளக்கங்களை அளித்தார் என்பதைப் பொதுவெளியில் செய்தியாளர்களிடம் விவரிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: 28வது காமன்வெல்த் சபாநாயகர் மாநாடு..!! இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!