×
 

தாமரை மலரும்.. தமிழகம் மாறும்! போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை வெளுத்து வாங்கிய தமிழிசை!

தமிழகம் போதையில் தள்ளாடுவதாகக் குற்றம் சாட்டிய தமிழிசை, 2026-இல் தமிழகத்திலும் தாமரை மலர்ந்தே தீரும் என்று தெரிவித்துள்ளார்.

பாஜக அடித்தட்டு மக்களுக்கான கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் தேர்தல் அறிக்கை அமையும் என்றும், தமிழகத்தில் நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழகம் போதையில் தள்ளாடுவதாகக் குற்றம் சாட்டிய அவர், திமுக ஆட்சிக்கு விடை கொடுக்க மக்கள் தயாராகிவிட்டதாகச் சாடினார்.

டெல்லியில் நடைபெறவுள்ள பாஜக தேசியத் தலைவர் தேர்தல் மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காகச் சென்னை விமான நிலையம் வந்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தின் தற்போதைய சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் வரவிருக்கும் தேர்தல் வியூகங்கள் குறித்து அவர் அனல் பறக்கும் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

தமிழகத்தில் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்களைத் தட்டிக்கேட்ட வங்கி அதிகாரி உள்ளிட்ட இருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்ட தமிழிசை, "தமிழகம் இன்று போதையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. எந்த ஆட்சியிலும் இல்லாத அளவுக்குக் கொடூரங்கள் அரங்கேறி வருகின்றன. இவ்வளவு நடந்த பிறகும் கஞ்சாவே இல்லை என்று அரசு கூறுவது வேடிக்கையாக உள்ளது. இந்த விடியா ஆட்சிக்கு விடை கொடுக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் தற்போதைய எண்ணமாக இருக்கிறது" என ஆவேசமாகத் தெரிவித்தார். மொழி என்பது இணைக்கும் பாலம் என்று முதல்வர் கூறுவது வெறும் விளம்பரமே தவிர, உண்மையில் மொழியை வைத்து மக்களைப் பிரித்தாளும் வேலையையே திமுக செய்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க: “முதலீடுகள் முடக்கம், தகுதியற்ற பேராசிரியர்கள்!” தமிழக அரசை தாக்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி சர்ச்சை பேச்சு!

திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்துப் பேசிய அவர், "எங்களை அடிமை கூட்டணி என்று விமர்சித்தவர்கள், இன்று டெல்லிக்கு அழைக்கப்பட்டு கூட்டணி குறித்துப் பேசக்கூடாது என்று அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இதுதான் உண்மையான அடிமை கூட்டணி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்களைச் சுட்டுக்கொன்ற காங்கிரஸுடனும், நீட் தேர்வை ஆரம்பித்து வைத்தவர்களுடனும் திமுக கூட்டணி வைத்திருப்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து வைத்துள்ளனர். பாஜக அடித்தட்டு மக்களுக்கான கட்சி. தமிழுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என்பவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் எங்களின் தேர்தல் அறிக்கை அமையும். அது பெண்களின் வளர்ச்சி மற்றும் அடிப்படைத் தேவைகளை முழுமையாக மேம்படுத்தும் அறிக்கையாக இருக்கும்" என உறுதிபடத் தெரிவித்தார்.

பீகார் மற்றும் மகாராஷ்டிராவைத் தொடர்ந்து அடுத்ததாகத் தமிழகத்திலும் பாஜகவின் வெற்றி உறுதி என்றும், பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். பாஜகவின் தேர்தல் அறிக்கை வெறும் வெற்று காகிதமல்ல, அது நடைமுறைப்படுத்தக் கூடிய ஆவணங்களாக இருக்கும் எனத் தெரிவித்த அவர், மத்திய அரசின் நல்ல திட்டங்களால் மக்கள் பாஜக பக்கம் ஈர்க்கப்பட்டு வருவதாகக் கூறி விடைபெற்றார்.

இதையும் படிங்க: மக்களே மிஸ் பண்ணிடாதீங்க... ரொம்ப முக்கியம்..! வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share