ரூ.17 கோடி வருமானம், ரூ.11 கோடி முதலீடு கணக்கில் காட்டவில்லையா? கே.என்.நேருவுக்கு நோட்டீஸ்!
வருமான வரித் துறை தொடர்ந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பதிலளிக்கச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வருமான வரித் தாக்கல் கணக்கில் கணக்கில் காட்டப்படாத ரூ.17 கோடி வருமானம் மற்றும் ரூ.11.98 கோடி முதலீடுகள் தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும் திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கே.என். நேருவுக்கு விளக்கம் கேட்டுச் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2013-14 முதல் 2015-16 வரையிலான நிதியாண்டுகளில், வருமான வரித் தாக்கலில் கே.என். நேரு கணக்கில் காட்டப்படாத ரூ.17 கோடி வருவாயையும், ரூ.11.98 கோடி முதலீடுகளையும் மறைத்துள்ளதாகக் கூறி வருமான வரித் துறை சார்பில் மீண்டும் மதிப்பீடு செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து கே.என். நேரு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT), அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, வருமான வரித் துறையின் முதன்மை ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வரி வழக்கு மேல்முறையீடு (Tax Case Appeal) செய்யப்பட்டது.
இதையும் படிங்க: ஹப்பாடா...! பொன்முடிக்கு பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்ட் வாபஸ்..! முக்கிய உத்தரவு..!!
இந்த வழக்கை இன்று (07.08.2026) விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வருமான வரித் துறை முன்வைத்துள்ள வாதங்களில் முதற்கட்ட முகாந்திரம் இருப்பதாக ஏற்றுக்கொண்டு வழக்கை விசாரணைக்கு அனுமதித்ததுடன், இதுகுறித்து கே.என். நேரு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசியல் கட்சிகளுக்கு கொட்டிய நன்கொடை! ரூ.1,051 கோடி வசூல்... முதலிடத்தில் திமுக!