×
 

மதுரை தெப்பக்குளம் மாசடைவதை தடுக்க உத்தரவு! மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் மாசடைவதைத் தடுக்கக் கோரிய வழக்கில், மாநகராட்சி ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகம் பதில் மனுத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான வரலாற்றுச் சிறப்புமிக்க மாரியம்மன் கோவில் தெப்பக்குளம், குப்பை மற்றும் விலங்குகளின் கழிவுகளால் மாசடைந்து வருவதைத் தடுக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

தெப்பக்குளத்திற்கு நீர் வரும் பனையூர் கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி உள்ளிட்டோர் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளனர்.

மதுரையின் அடையாளங்களில் ஒன்றான மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தைப் பாதுகாப்பது தொடர்பாக, மதுரையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "தெப்பக்குளத்திற்கு நீர் ஆதாரம் வழங்கும் பனையூர் கால்வாயில் குப்பைகள் மற்றும் கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகின்றன. இதனால் குளத்திற்கு வரும் நீர் முற்றிலும் மாசடைந்து, அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நீர்நிலைகளைச் சுத்தம் செய்து பாதுகாத்திட வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு தப்பி ஓடிய கொலை குற்றவாளிகள்!! வங்கதேச போலீசார் புதிய குற்றச்சாட்டு!

இந்த மனு இன்று நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பனையூர் கால்வாயில் விலங்குகளின் கழிவுகளும், அருகில் உள்ள கடைகளின் குப்பைகளும் தடையின்றி கொட்டப்படுவது குறித்துக் கடும் அதிருப்தி தெரிவித்தனர். “பனையூர் கால்வாயின் பராமரிப்பு நீர்வளத் துறையின் பொறுப்பு; அதேசமயம் அங்குச் சட்டவிரோதமாகக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பது மதுரை மாநகராட்சியின் கடமை” என நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

சுகாதாரச் சீர்கேட்டால் பாதிக்கப்பட்டுள்ள தெப்பக்குளத்தை மீட்டெடுக்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோர் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். புனிதமான கோவில் குளத்திற்கு வரும் நீரில் கழிவுகள் கலப்பதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீதான இந்த நீதிமன்றக் கண்டனம், மதுரை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: பச்சை துரோகம் செய்த அன்புமணி! ராமதாஸின் ஆட்டம் இனிதான் ஆரம்பம்!! ஸ்ரீகாந்தி கொந்தளிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share