×
 

தேவையின்றி ஸ்டாலின் மீது அபாண்டப் பழியைச் சுமத்தினார் இபிஎஸ்..!! கொந்தளித்த வைகோ..!!

தோழர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பினை ஏற்று அந்தப் பதவிக்கு புகழ் மகுடம் சூட்டினார் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள கடுமையான அறிக்கையில், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சமீபத்திய பேச்சுக்கு தீவிர எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது அப்பட்டமான பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருப்பதாக வைகோ குற்றம் சாட்டினார். “ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்” என்று விமர்சித்த வைகோ, ஸ்டாலின் கலைஞரை இமைக்கண்ணைப் போல பாதுகாத்து வந்ததாகவும், அதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அயோக்கியத்தனமான அபாண்டப் பழியை சுமத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடித்தளப் பணியாளராக தொடங்கி, வட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய ஸ்டாலின், திருமணமான ஐந்தாவது மாதத்திலேயே மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, காவல் துறையின் கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டபோது கடும் சித்ரவதைக்கு உள்ளானார் என்று வைகோ நினைவூட்டினார். அதன் பிறகு தியாகியின் உருவாக பொதுவாழ்வில் இளைஞர் அணியில் இணைந்து, அயராத உழைப்பால் அதன் தலைவராக உயர்ந்தார். 

பின்னர் சென்னை மாநகராட்சி மேயர், அமைச்சர், துணை முதல்வர் என படிப்படியாக உயர்ந்து, இறுதியில் திமுகவின் கோடானு கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப முதலமைச்சர் பொறுப்பை ஏற்று, அந்தப் பதவிக்கு புகழ் சேர்த்தார் என்று புகழ்ந்தார்.கலைஞர் பிணியுற்றிருந்த காலத்தில் ஸ்டாலின் தன் தந்தையை இமைக்கண்ணைப் போல காத்து வந்ததாகவும் வைகோ குறிப்பிட்டார். கலைஞர் மறைந்தபோது, அறிஞர் அண்ணா மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதையில் குறிப்பிட்டபடி, அவரை அண்ணாவின் நினைவிடத்திற்கு அருகில் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் துடித்தார். 

இதையும் படிங்க: சிலிண்டர் தட்டுப்பாடு! தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்!

அதற்காக தன் சுயமரியாதையைக்கூட பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கே நேரில் சென்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எடப்பாடி பழனிசாமி எந்தவித மனிதாபிமானமும் இன்றி அந்த வேண்டுகோளை கடுமையாக நிராகரித்ததாக வைகோ குற்றம் சாட்டினார்.எவ்வளவு தடைகள் வந்தாலும் விடா முயற்சியுடன் செயல்பட்ட ஸ்டாலின், வழக்கறிஞர்கள் மூலம் உயர்நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் கலைஞரை அண்ணாவின் அருகில் நல்லடக்கம் செய்ய அனுமதி அளித்த செய்தியைக் கேட்டதும் ஸ்டாலின் கண்ணீர் மல்க கதறினார் என்று வைகோ விவரித்தார்.

உலகெங்கும் உள்ள தமிழர்கள் இந்தக் காட்சியைக் கண்டு மனம் கலங்கியதாகவும் அவர் கூறினார்.எடப்பாடி பழனிசாமியை “கல்லினும் கொடிய மனம் கொண்டவர்” என்று விமர்சித்த வைகோ, அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாதபடிகளுக்கு சேவகம் செய்த தன்மானமற்ற நபர் என்றும் சாடினார்.இனிமேல் இதுபோன்ற அவதூறான கருத்துகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறினால், தனது தாக்குதல்களுக்கு அவர் பதைபதைத்து அரசியல் களத்தில் பின்னங்கால் பிடரியில் அடிபடும் அளவுக்கு ஓட நேரிடும் என்று வைகோ கடுமையாக எச்சரித்துள்ளார்.


 

இதையும் படிங்க: உதயசூரியனுக்கு ஓகே சொன்னது ஏன்?! வைகோ மனம் மாறியது எப்படி? துர்கா ஸ்டாலின் மேஜிக்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share