தாயா இல்லை பேயா?... கள்ள உறவுக்காக ஒன்றரை வயது குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற அம்மா கைது...!
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே, ஒன்றரை வயது குழந்தையை விஷம் வைத்து கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட தாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகேயுள்ள வரக்கூர் தெற்குக்காடு, திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவருக்கும், திருவாச்சூர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான லலிதாவுக்கும் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு ஐந்து வயதுடைய அர்ஜுன் ராஜ் மற்றும் ஒன்றரை வயதுடைய புவன் ராஜ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கணவன்–மனைவி இடையே அடிக்கடி ஏற்பட்ட குடும்பத் தகராறுகளால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், லலிதா தனது ஒன்றரை வயது மகன் பவன் ராஜுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் மரணத்தில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: திருத்தணி பண்ணைக்குள் சிறுவன் சடலம்... சிமெண்ட் தரை போட்டு மூடி மறைத்தது அம்பலம்...!
பிரேதப் பரிசோதனை அறிக்கையில், குழந்தை விஷம் அருந்தியதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தலைவாசல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
காவல் ஆய்வாளர் பூர்ணிமா தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தலைமறைவாக இருந்த லலிதாவை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், லலிதாவிற்கு ஒரு கட்டிடத் தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டிருந்ததாகவும், அந்த உறவிற்கு இடையூறாக இருப்பதாகக் கருதி தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து கொலை செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், குழந்தை வலிப்பு நோயால் உயிரிழந்ததாக நாடகமாடியதும் காவல்துறை விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து லலிதாவை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருமணத்தை மீறிய உறவுக்கு இடையூறாக இருந்ததாகக் கருதி, ஒன்றரை வயது குழந்தையை விஷம் வைத்து கொலை செய்துவிட்டு, வலிப்பு நோயால் உயிரிழந்ததாக நாடகமாடிய தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "தமிழகத்தையே உலுக்கிய கவின் ஆணவக் கொலை"..! சுர்ஜித்தின் தந்தை சரவணனுக்கு ஜாமீன்..!!