தவிக்கும் விவசாயிகள்... தவெக அரசின் வஞ்சனை..! நயினார் கண்டனம்.!
விவசாய கடன் தள்ளுபடி விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு வஞ்சனை செய்வதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
விவசாயிகளான கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்குக் கடன் தள்ளுபடியை மறுப்பதா என்றும் தவெக அரசின் வஞ்சனைக்குக் கண்டனம் எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் தமிழக விவசாயிகளின் "பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும்" எனத் தேனொழுக ஜோசப் விஜய் அரசு வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தார்.
இன்று புதிய கட்டுப்பாடுகள் என்ற பெயரில் கூட்டுறவு சங்க நிர்வாகக் குழுவினரைக் குறிவைத்து அவர்களுக்குக் கடன் தள்ளுபடியை மறுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என்றும் கூறினார். அதுபோல, தங்களின் உரிமைக்காகப் போராடும் அவர்களை "எதிர்க்கட்சிகளால் தூண்டப்பட்டவர்கள்" என முதலமைச்சர் விஜய் குற்றஞ்சாட்டியிருப்பது, உழவர் சமூகத்தின் சுயமரியாதையைச் சிதைக்கும் செயலாகும் என்றும் கூறியுள்ளார்.
உழவர்கள் யாருடைய கைப்பாவையும் அல்ல என்று தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், அவர்களின் போராட்டம் வாழ்வாதார உரிமைக்கான சுயமான குரல் என்றார். கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகளும், கௌரவப் பொறுப்புகளில் ஊதியமின்றிச் சேவையாற்றிய தலைவர்களும் அடிப்படையில் விவசாயிகளே ஆவர்.
இதையும் படிங்க: என்ன முதல்வரே இதெல்லாம்..? திருச்செந்தூர் கோவில் சேவை கட்டணம் உயர்வு..? நயினார் கண்டனம்..!!
அத்தகைய உழவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பயிர்க்கடன் தள்ளுபடி கிடையாது என்ற புதிய விதியும், ஒரு லட்சம் ரூபாய் கடன் பெற்ற விவசாயிக்கு வெறும் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே தள்ளுபடி என்ற அறிவிப்பும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல் என குற்றம் சாட்டியுள்ளார். எனவே, கூட்டுறவுத் துறை விவசாயிகளைப் பழிவாங்கும் இந்த பாரபட்சமான தள்ளுபடி முறையைக் கைவிட்டு, அனைத்து உழவர்களின் பயிர்க்கடன்களையும் எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய முதல்வர் விஜய்க்கு வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: "அரசியல் ஸ்டாண்ட் வேணாம்யா"..! அமைச்சர் நிர்மல் குமாரை கிழித்து தொங்கவிட்ட நயினார்..!!