ஆகஸ்ட் 12-ல் வானில் அரிய அதிசயம்!! 4 மணி நேரம் நீடிக்கும் சூரிய கிரகணம்!! நேரலையில் ஒளிபரப்பும் நாசா!
வரும் ஆகஸ்ட் 12ம் தேதி நிகழும் முழு சூரிய கிரகணத்தை நேரலை செய்வதாக நாசா அறிவித்துள்ளது.
விண்வெளி ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் அரிய வானியல் நிகழ்வான முழு சூரிய கிரகணம், வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நிகழ உள்ளது. இந்த அபூர்வ நிகழ்வை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கண்டுகளிக்க வசதியாக, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலவு நேராக கடந்து செல்லும்போது, சூரியனை முழுமையாக மறைத்து, அதன் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வே முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்த நிகழ்வின் போது சில நிமிடங்களுக்கு பகல் நேரமே இரவுபோல் மாறும். சூரியனைச் சுற்றியுள்ள கொரோனா பகுதியையும் தெளிவாகக் காணும் அரிய வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும்.
இந்த முறை நிகழும் முழு சூரிய கிரகணம் கிரீன்லாந்து, ஐஸ்லாந்து, அட்லாண்டிக் பெருங்கடல் பகுதி, போர்ச்சுக்கல், ஸ்பெயின் மற்றும் ரஷ்யாவின் வடக்கு பகுதிகளில் முழுமையாகக் காணப்படும். அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இது பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும் என்று வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விண்வெளி நிலையத்தை சென்றடைந்தார் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்... 8 மாதங்கள் நடக்கப்போகும் முக்கிய ஆய்வு!
முழு நிகழ்வும் சுமார் 4 மணி நேரம் 23 நிமிடங்கள் நீடிக்கும். இருப்பினும், ஒரு குறிப்பிட்ட இடத்தில் முழு சூரிய கிரகணம் தெரியும் கால அளவு அதைவிட மிகவும் குறைவாக இருக்கும். இந்திய நேரப்படி இந்த நிகழ்வு இரவு நேரத்தில் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து நேரடியாக பார்க்க முடியாது.
எனினும், இந்தியாவில் உள்ள விண்வெளி ஆர்வலர்கள் கவலைப்பட தேவையில்லை. நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்களில் இந்த அரிய வானியல் நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. இதன் மூலம் உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் மக்கள் பாதுகாப்பாக முழு சூரிய கிரகணத்தை ரசிக்க முடியும்.
வானியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, முழு சூரிய கிரகணம் என்பது அறிவியல் ரீதியாக மிகவும் முக்கியமான நிகழ்வாகும். சூரியனின் வெளிப்புற வளிமண்டலமான கொரோனாவை ஆய்வு செய்வதற்கும், சூரிய செயல்பாடுகளை ஆராய்வதற்கும் இதுபோன்ற கிரகணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால், இந்த நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: 8 மாத கால விண்வெளி பயணம்! தயாராகிறார் அனில் மேனன்! இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரர்!