நாங்கள் உண்மைக்காக போராடுகிறோம்... யங் இந்தியன் வழக்கை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுதி..!
நாங்கள் உண்மைக்காக போராடுகிறோம் என்று யங் இந்தியன் வழக்கை சுட்டிக்காட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது
நேஷனல் ஹெரால்டு பத்திரிகை என்பது நேருவின் அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவன மூலம் நடத்திவரப்பட்டது. அதன் பிறகு, கடன் பிரச்சினையால் இந்த நிறுவனம் மூடப்பட்ட நிலையில், இதனை சரி செய்ய காங்கிரஸ் கட்சி 90 கோடி ரூபாய் கடன் வழங்கியது. இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசுவாமி பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்தார் அதில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பங்கு சட்டவிரோதமாக யங் இந்தியா என்ற நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக வந்த புகாரை அடுத்து அமலாக்கத்துறை இதனை விசாரித்தது. இந்த குற்றச்சாட்டை ராகுல் காந்தியும் சோனியாகாந்தியும் மறுத்த நிலையில், குற்றப் பத்திரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுத்துள்ளது. மோடி அரசாங்கத்தின் தீய நோக்கமும், சட்டவிரோதச் செயல்களும் முழுமையாக அம்பலமாகி இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தெரிவித்துள்ளது.
'யங் இந்தியன் வழக்கில் காங்கிரஸ் தலைமைக்கு எதிராக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக, அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள். நீதிமன்றத்தால் முற்றிலும் சட்டவிரோதமானவை மற்றும் தீய நோக்கம் கொண்டவை என்று அறிவித்துள்ளது. அமலாக்கத்துறையின் இந்த வழக்குக்கு, அதிகார வரம்பு இல்லை என்றும், முதல் தகவல் அறிக்கை (FIR) எதுவும் இல்லாததால், வழக்கே இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசின் பழிவாங்கும் செயலை அம்பலப்படுத்திய நீதிமன்றம் - முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்
கடந்த பத்தாண்டுகளாக, மோடி அரசாங்கத்தால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அரசியல் உள்நோக்கத்துடன் தொடுக்கப்பட்ட இந்த வழக்கு, இந்திய மக்கள் முன் அம்பலமாகியுள்ளது என்றும் பணமோசடி வழக்கு இல்லை. குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் இல்லை, சொத்து பரிமாற்றம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் அரசியல் பழிவாங்கல். பிரச்சாரம், நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தல் மற்றும் திட்டமிட்ட பரப்புரையின் ஒரு பகுதியாக இருந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தோற்கடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியும், தலைமையும், உண்மைக்காகவும் ஒவ்வொரு இந்தியரின் உரிமைக்காகவும் போராட உறுதிபூண்டுள்ளன. நாங்கள் ஒருபோதும் அச்சுறுத்தப்பட மாட்டோம், அச்சுறுத்தப்படவும் முடியாது ஏனென்றால் நாங்கள் உண்மைக்காகப் போராடுகிறோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
இதையும் படிங்க: 2026 சட்டசபைத் தேர்தல்: அடுத்த மாதம் ராகுல் காந்தி தமிழகம் வருகை! கிராம கமிட்டி மாநாட்டில் பங்கேற்பு!