நீட் மறுத்தேர்வு வினாக்களும் கசிவு? சைபர் குற்றப் பிரிவு விசாரணை! மாணவர்கள் அதிர்ச்சி!
நீட்-2026 மறுதேர்வு வினாக்கள் கசிவதாக வந்திருக்கும் தகவல் குறித்து சைபர் குற்றப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக தனிநபர் அளித்த புகாருக்கு தேசிய தேர்வு முகமை பதிலளித்துள்ளது.
டெல்லி: நீட்-2026 மறுதேர்வு வினாத்தாள்கள் கசிவதாக வந்துள்ள புகாரைத் தொடர்ந்து சைபர் குற்றப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. இந்தத் தகவல் மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்டிஏ மற்றும் சைபர் டோஸ்ட் என்ற இரு எக்ஸ் பக்கங்களை டேக் செய்து பிரின்ஸ் ஸ்ரீவஸ்தவா என்பவர் பதிவிட்டிருந்தார். சில டெலிகிராம் சேனல்களில் நீட்-2026 மறுதேர்வுக்கான வினாக்கள் வெளியிடப்படுவதாக அறிவிப்புகள் வருவதாகவும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்தப் புகாருக்கு பதிலளித்த என்டிஏ, “இது குறித்து சைபர் குற்றப் பிரிவு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற நீட்-2026 இளநிலைத் தேர்வில் வினாத்தாள் கசிவு புகார் எழுந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடைபெறவுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வு ரத்து! தேர்வுக்கட்டணம் திருப்பி அளிப்பு!! வங்கி விவரங்களை புதுப்பிக்க கூடுதல் அவகாசம் அறிவிப்பு!
இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. வினாத்தாளைத் தயாரித்த குழுவில் இருந்த பேராசிரியர்களே பணம் பெற்றுக்கொண்டு வினாக்களை கசியவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பல ஆண்டுகளாக வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் இருந்த இந்தப் பேராசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் சுமார் 5,000 தேர்வு மையங்களில் 22 லட்சம் மாணவர்கள் இந்த மறுதேர்வை எதிர்நோக்கியுள்ளனர். நீட் தேர்வு அமைப்பில் தொடர்ந்து ஏற்படும் முறைகேடுகள் மாணவர்களுக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றன. தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு ஏற்படும் சிரமங்கள், தொடர் வினாத்தாள் கசிவு என பல்வேறு பிரச்சினைகள் என்டிஏ மீதான அதிருப்தியை அதிகரித்துள்ளன.
இந்தப் புதிய டெலிகிராம் கசிவு புகாரும் உண்மையாக இருந்தால், மறுதேர்வும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, சைபர் குற்றப் பிரிவு விரைந்து விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இதையும் படிங்க: நீட் தேர்வு மையங்களை மாற்றிக் கொள்ளலாம்! எந்த கட்டணமும் இல்லை! தேசிய தேர்வு முகமை ஏற்பாடு!