வெடித்தது போராட்டம்... நேபாளத்தில் சிக்கித் தவித்த தமிழர்கள் மீட்பு! துரித கதியில் நடவடிக்கை
நேபாளத்தில் சிக்கி தவித்து வந்த 116 தமிழர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
நேபாளத்தில் 2008ஆம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்து, மதச்சார்பற்ற கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசாக மாறிய பிறகு, அரசியல் ஸ்திரமின்மை தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த 17 ஆண்டுகளில் 13 முதல் 14 அரசாங்கங்கள் மாறியுள்ளன, இது நாட்டின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தை கடுமையாக பாதித்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களிடையே பரவலான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பின்னணியில், தற்போதைய பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியின் ஆட்சியில் மக்களின் ஏமாற்றம் உச்சத்தை அடைந்துள்ளது. இதன் விளைவாக, இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் புதிய தலைமுறை போராட்டங்கள் தோன்றியுள்ளன. காத்மாண்டு உள்ளிட்ட நேபாளத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் திரண்டு, ஊழல் மற்றும் சமூக ஊடகத் தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்கள் ஜெனரல் Z போராட்டங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை பெரும்பாலும் இளைய தலைமுறையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.
இவர்கள் அரசின் ஊழல் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஹத்யாரா சர்க்கார் என்று முழக்கமிட்டு, அரசின் வன்முறை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நீதி கோரினர். குறிப்பாக, நேற்று நடந்த மோதல்களில் 19 ஆர்ப்பாட்டக்காரர்கள் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த உயிரிழப்புகள் மக்களின் கோபத்தை மேலும் தூண்டியதால், இன்று போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்தன. காத்மாண்டுவில் நடந்த இந்த ஆர்ப்பாட்டங்களின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் நேபாள காங்கிரஸ் கட்சியின் மத்திய அலுவலகத்திற்கு தீ வைத்தனர். மேலும், அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநரின் இல்லங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: நேபாளத்தின் இடைக்கால பிரதமராகிறார் குல்மான் கிசிங்..!!
இந்த நிலையில், ராணுவ படையினர் தடுத்தும் அதனைப் பொருட்படுத்தாமல் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து தீ வைத்தனர். இதனால் நேபாளத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது. அங்குள்ள தமிழர்களை இணைப்பதற்காக முழு முயற்சி எடுக்கப்பட்டது. அதன்படி 116 தமிழர்கள் நேபாளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு வாரிய அமைக்கப்பட்டுள்ளதாகவும் நேபாளத்தில் சிக்கித் தவித்து வரும் தமிழர்கள் தங்களது விபரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நேபாளத்தில் தொடரும் கலவரம்.. சிறைகளில் இருந்து 15 ஆயிரம் கைதிகள் எஸ்கேப்..!!