×
 

2500 டிஎம்சி தண்ணீரை கடலில் விட்டுவிட்டு கர்நாடகாவிடம் கெஞ்சுவதா? மேகதாது விவகாரத்தில் கொந்தளித்த சீமான்..!!

கர்நாடக மாநில முதல்வரும் சரி, துணை முதல்வரும் சரி அவர்களது மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறார்கள் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மேகதாது அணை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தின் நீர் வளத்தை முழுமையாகப் பயன்படுத்தி தன்னிறைவு பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த சீமான், “தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 950 டிஎம்சி மழை பெய்கிறது. மொத்த நீர் வளம் சுமார் 4,000 டிஎம்சியாக இருக்கும் நிலையில், தற்போது 1,500 டிஎம்சி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மீதமுள்ள 2,500 டிஎம்சி நீர் வீணாக கடலில் கலக்கிறது. இந்த நிலை எத்தனை ஆண்டுகளாகத் தொடர்கிறது? இந்த 2,500 டிஎம்சியில் மேலும் 1,500 டிஎம்சியைச் சேமித்தால், கர்நாடகாவிடம் 150 டிஎம்சிக்காக கெஞ்ச வேண்டிய அவசியமே இருக்காது” என்றார்.

நீர் மட்டுமின்றி, இயற்கை வளங்களிலும் தமிழகம் உரிமை கொண்டாட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். “நெய்வேலி பழுப்பு நிலக்கரி உனக்கு இல்லை, உன் வளம் உனக்கு, உன் நீர்வளம் உனக்கு, உன் நிலவளம் உனக்கு என்றால், என் நிலவளம் எனக்கு என்றுதானே அர்த்தம். இதற்காக சண்டை செய்ய ஒரு வீரன் தேவை. அதற்கு நீங்கள் ஏன் இல்லை?” என்று கேள்வி எழுப்பினார். 

மத்திய அரசின் பங்கு குறித்தும் சீமான் விமர்சனம் செய்தார். “மத்திய அரசு என்ன செய்துவிடும்? பூட்டு அங்கே இருக்கலாம், ஆனால் சாவி நம்மிடம் இருக்கிறது. இதைப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்” என்றார். இதற்கு உதாரணமாக, முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர். (என்.டி. ராமராவ்) அவர்களைச் சுட்டிக்காட்டினார். “நடிகன் என்று எல்லோரும் கிண்டல் செய்துகொண்டிருந்த நேரத்தில், இந்திரா காந்தி ஆதிக்கம் செலுத்தியபோது, ஒரே இரவில் மத்திய அரசு அலுவலகங்களைப் பூட்டி சாவியை எடுத்து வந்தார். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி திறந்துவிட்டார். அப்படி ஒரு தலைவர் தமிழகத்துக்கு தேவை. சும்மா எல்லாவற்றுக்கும் காலில் விழுந்து கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கன்னடம் பிறக்கும் முன்பே காவிரி எங்களுடையது! மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகாவை வெளுத்து வாங்கிய சீமான்!

கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக இருப்பதைப் பாராட்டிய சீமான், தமிழக அரசியல் தலைவர்களை நோக்கி கேள்வி எழுப்பினார். “கர்நாடக முதல்வரும் துணை முதல்வரும் தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக இருக்கிறார்கள். நீங்கள் உங்கள் மாநிலத்துக்கு உண்மையாக இருக்கிறீர்களா? தமிழக மக்கள் உங்களுக்கு வாக்கு அளித்து அதிகாரத்தில் அமர வைத்தார்கள். ஆனால் நீங்கள் ‘இந்தியாவைக் காப்பாற்றப் போகிறேன்’ என்று சொல்கிறீர்கள். இது சரியா?” என்று வினவினார்.

தமிழகத்தின் நீர் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண மேகதாது அணை போன்ற திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, மாநிலத்தின் சொந்த வளங்களை முழுமையாகப் பயன்படுத்தும் கொள்கையை வலியுறுத்திய சீமானின் பேட்டி, அரசியல் அரங்கில் கவனம் பெற்றுள்ளது. தமிழகத்தின் நீர் உரிமை, இயற்கை வளப் பாதுகாப்பு ஆகியவை தொடர்ந்து விவாதப் பொருளாகி வரும் நிலையில், இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.
 

இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026: 2026 காரைக்குடியில் சீமானை வீழ்த்தி தவெக வேட்பாளர் பிரபு அபார வெற்றி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share