பரந்தூர் விமான நிலைய திட்டம்! முதல்வர் விஜய் கறார்! பெரிய பிரச்னையாகிவிடும் என அச்சுறுத்தும் அதிகாரிகள்!
ஓசூர் மற்றும் ராமேஸ்வரத்தில் 2 விமான நிலையம் அமைக்க, மத்திய அரசின் அனுமதி கிடைப்பது கேள்விக்குறியாகும் என, தொழில் துறை அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கும் திட்டம் முடங்கும் நிலைக்கு வந்துள்ளது. மத்திய அரசு அனைத்து அனுமதிகளையும் வழங்கிய நிலையில், தமிழக அரசு திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொழில் துறை அதிகாரிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்க விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில், சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை பரந்தூரில் அமைக்க திட்டமிடப்பட்டது. 5,320 ஏக்கர் நிலம் தேவைப்படும் இந்த திட்டத்துக்கான மொத்த செலவு 29,150 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டது. 2024-25ஆம் ஆண்டு முதல் தனியார் நிலங்களை கையகப்படுத்தும் பணி தொடங்கியது. இதுவரை 1,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர். 2025ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இதையும் படிங்க: பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்! முதல்வர் விஜயிடம் ஆய்வறிக்கை சமர்பிக்கும் ஆணையம்!
அதன் பின்னர் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று விஜய் முதல்வரானார். கடந்த மாதம் டிட்கோ தொழில் வளர்ச்சி நிறுவன ஆய்வுக் கூட்டத்தில், பரந்தூர் விமான நிலையப் பணிகளை நிறுத்தி வைக்குமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டதாக தெரிகிறது.
இந்நிலையில், மின் துறை அமைச்சர் நிர்மல்குமார் நேற்று முன்தினம், “பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு இருப்பதால் மாற்று இடங்களை ஆய்வு செய்து வருகிறோம்” என அறிவித்தார். இந்த அறிவிப்பு அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “மத்திய அரசு ஏற்கனவே அனுமதி அளித்த பரந்தூர் திட்டத்தை கைவிட்டால், ஓசூரில் 2,000 ஏக்கரிலும், ராமேஸ்வரம் அருகே மாணிக்கநேரியில் 750 ஏக்கரிலும் திட்டமிடப்பட்டுள்ள விமான நிலையங்களுக்கு அனுமதி கிடைப்பது சந்தேகமாகிவிடும். பல ஆண்டுகளாக உழைத்த அதிகாரிகளின் உழைப்பு வீணாகும்” எனக் கவலை தெரிவித்தார்.
விமான நிலையத் திட்டம் பெறுவது எளிதல்ல. பல இடங்களை பரிசீலித்த பின்னர், மக்கள் பாதிப்பு குறைவான பரந்தூரை தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசின் கொள்கை அனுமதி மற்றும் இட அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ள நிலையில், திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய இழப்பீடு கொடுத்து திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த முடிவு தமிழகத்தின் விமானப் போக்குவரத்து வளர்ச்சியை பாதிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: பரந்தூர் விமான நிலைய பணிகள் நிறுத்தம்!! சிக்சர் மேல் சிக்சர் அடிக்கும் முதல்வர் விஜய்!! சிப்கார் அமைக்க திட்டம்?