இந்தியா - இத்தாலி நட்பின் இனிய சுவை..!! பார்லே அறிமுகப்படுத்திய புதிய 'மெலோடி டிராமிசு'!
'மோடி + மெலோனி' என்ற பெயரை சேர்த்து மெலோடி என்ற மீம்ஸ் இணையத்தில் வைரலானது.
பார்லே நிறுவனம் தனது பிரபலமான மெலோடி டாப்பியின் லிமிடெட் எடிஷன் பதிப்பான ‘மெலோடி டிராமிசு’வை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிற்கும் இத்தாலிக்கும் இடையிலான வலுவான நட்புறவைக் கொண்டாடும் வகையில் வெளியிடப்பட்ட இந்த தயாரிப்பு, சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கடந்த மே மாதம் ரோம் நகரில் இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக இத்தாலி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு இந்தியாவின் பாரம்பரிய மெலோடி டாப்பிகளைப் பரிசாக வழங்கினார். அந்த தருணத்தை மெலோனி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோவாகப் பதிவு செய்து, “பிரதமர் மோடி மிகவும் சுவையான மெலோடி டாப்பியைத் தந்துள்ளார்” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இரு தலைவர்களும் சிரித்துப் பேசிய அந்தக் காட்சி உலகெங்கும் வைரலாகி, ‘மெலோடி’ என்ற ஹாஷ்டேகை மீண்டும் டிரெண்டாக மாற்றியது.
ஏற்கனவே 2023-ஆம் ஆண்டிலிருந்து ஜி20, COP28 போன்ற மாநாடுகளில் இருவரும் எடுத்த புகைப்படங்கள் மூலம் ‘மெலோடி’ மீம் பிரபலமடைந்திருந்தது. இப்போது அந்த நட்பு உறவு ஒரு சாக்லேட் வடிவில் உருவெடுத்துள்ளது. புதிய மெலோடி டிராமிசு, இத்தாலியின் பாரம்பரிய இனிப்பான டிராமிசுவின் காபி கலந்த சுவையில் தயாரிக்கப்பட்டுள்ளது. 180 கிராம் எடையுள்ள பாக்கெட்டின் முகப்பில் “இந்தியா-இத்தாலி நட்புறவைக் கொண்டாடுகிறோம்” என்ற வாசகம் அச்சிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “டிவிகே... டிவிகே...” - சந்தி சிரிக்கும் தவெக அமைச்சரின் செயல்... காற்றில் பறந்த சி.எம். விஜய் ஆர்டர்...!
நண்பர்கள் தினத்தை (ஆகஸ்ட் 2) முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த லிமிடெட் எடிஷன், விரைவுப் பொருள் விநியோக தளமான பிளிங்க்இட்டில் மட்டுமே பிரத்தியேகமாகக் கிடைக்கிறது. காபி கேண்டி பிரிவில் பட்டியலிடப்பட்டுள்ள இது, அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியது. சமூக ஊடகங்களில் பயனர்கள் இதை “ஸ்மார்ட் மார்க்கெட்டிங்” என்றும், சுவை பற்றி ஆர்வத்துடன் பேசியும் வருகின்றனர்.
1983-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மெலோடி, “மெலோடி இத்னி சாக்லேட்டி க்யூன் ஹை?” என்ற புகழ்பெற்ற டேக்லைனுடன் பல தலைமுறை இந்தியர்களின் நினைவுகளில் இடம்பிடித்துள்ளது. இப்போது அது சாதாரண மிட்டாயில் இருந்து சர்வதேச ராஜதந்திர உறவின் இனிமையான அடையாளமாக உயர்ந்துள்ளது. இந்தியா-இத்தாலி நட்பை மேலும் வலுப்படுத்தும் இந்த முயற்சி, வணிக உலகிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: தலைதூக்கும் காவிரி பிரச்சனை... அனைத்து கட்சி கூட்டம் நடத்த ஓங்கும் குரல்கள்... CPI வீரபாண்டியன் வலியுறுத்தல்..!!