×
 

ரூ.230 கோடியில் தேசிய நினைவிடம்!! தாமரை வடியில் அதிநவீன அருங்காட்சியகம்! இன்று மோடி திறந்து வைப்பு!

பாரத ரத்னா விருது பெற்ற வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளையொட்டி லக்னோவில் அவரது சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் பெற்றுள்ளேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

லக்னோ: முன்னாள் பிரதமர் பாரத ரத்னா அடல் பிகாரி வாஜ்பாயின் 101-வது பிறந்தநாளான இன்று (டிசம்பர் 25, 2025) உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் பிரமாண்டமான 'ராஷ்ட்ரிய பிரேரணா ஸ்தல்' (Rashtra Prerna Sthal) தேசிய நினைவிட வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்க உள்ளார். 

மதியம் சுமார் 2:30 மணிக்கு நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பொதுக்கூட்டத்தில் உரையாற்றவும் உள்ளார். சுமார் 230 கோடி ரூபாய் செலவில் 65 ஏக்கர் பரப்பளவில் கோமதி ஆற்றங்கரையில் அமைக்கப்பட்ட இந்த வளாகம், இந்தியாவின் தேசிய உத்வேகத்தை ஏற்படுத்தும் முக்கிய இடமாக விளங்கும்.

இந்த வளாகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய சித்தாந்தவாதிகளான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜி, பண்டித் தீனதயாள் உபாத்யாயா மற்றும் அடல் பிகாரி வாஜ்பாய் ஆகியோரின் 65 அடி உயர வெண்கல சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: கர்நாடகாவில் பயங்கர விபத்து! சொகுசு பஸ் தீப்பிடித்து 17 பேர் பலி! அதிகாலையில் நடந்த கோரம்!!

ஒவ்வொரு சிலையும் 42 டன் எடை கொண்டது. இந்த சிலைகள் அவர்களின் தேசியவாத சிந்தனை, நாடு கட்டமைப்பு மற்றும் பொது வாழ்வில் ஆற்றிய பங்களிப்புகளை குறிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிலைகள் அமைந்த தளம் நீர்த்தொட்டியால் சூழப்பட்டுள்ளது.

வளாகத்தின் மற்றொரு முக்கிய அம்சமாக தாமரை வடிவில் அமைக்கப்பட்ட இரு மாடி அதிநவீன அருங்காட்சியகம் உள்ளது. சுமார் 6,300 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அருங்காட்சியகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் இம்மர்சிவ் அனுபவங்கள் மூலம் இந்தியாவின் தேசிய பயணமும், இம்மூன்று தலைவர்களின் பங்களிப்புகளும் விவரிக்கப்பட்டுள்ளன. 

வாஜ்பாய்ஜியின் கவிதைகள், உரைகள், தேசியவாத கோட்பாடுகள் ஆகியவை இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதால், பார்வையாளர்கள் அவர்களின் வாழ்வையும் சிந்தனைகளையும் ஆழமாக அறிந்து கொள்ளலாம்.

பிரதமர் மோடி இந்நிகழ்ச்சியை ஒட்டி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். "வாஜ்பாய்ஜியின் 101-வது பிறந்தநாளில் அவரது சிலையை திறந்து வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடுவோர் தேச கட்டமைப்பில் பங்களித்த தலைவர்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

எதிர்கால தலைமுறைகளுக்கு தன்னலமற்ற தலைமைத்துவம் மற்றும் நல்லாட்சி குறித்த உத்வேகத்தை அளிக்கும் இந்த வளாகம், இந்திய ஜனநாயகம் மற்றும் வளர்ச்சிப் பயணத்தில் தடம் பதித்த வாஜ்பாய்ஜியின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிறந்தார் இயேசு கிறிஸ்து!! தேவாலயங்களில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்! நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share