×
 

கூட்டணி கணக்குகள் தீவிரம்! பியூஷ் கோயலை சந்திக்கிறார் அன்புமணி!

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று இரவு நேரில் சந்தித்து பேச உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் வியூகங்கள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.

2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தமிழகத்தில் கூட்டணிக் கணக்குகள் மிக வேகமாக அரங்கேறி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வந்துள்ளார். இன்று இரவு 7 மணி அளவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரை நேரில் சந்தித்துப் பேசுகிறார். கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இணைந்த பிறகு, பியூஷ் கோயலுடன் அன்புமணி மேற்கொள்ளும் இந்த முதல் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

இந்தச் சந்திப்பின் போது, கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் குறிப்பிட்ட தொகுதிகள் குறித்து முதற்கட்டமாக விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஏற்கனவே அதிமுக - பாஜக - பாமக ஆகிய கட்சிகள் இணைந்து வலுவான கூட்டணியை அமைத்துள்ள நிலையில், வட மாவட்டங்களில் பாமகவின் வாக்கு வங்கியை எவ்வாறு முழுமையாகப் பயன்படுத்துவது என்பது குறித்தும் பியூஷ் கோயல் ஆலோசிக்க உள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பாகப் பேச ஏற்கெனவே பாமக தரப்பில் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்வதற்கான ஒரு முன்னோட்டமாகவே அரசியல் நோக்கர்களால் கருதப்படுகிறது.

குறிப்பாக, டெல்லியில் இருந்து வந்துள்ள பியூஷ் கோயல், அதிமுக தலைவர்களையும் சந்திக்க திட்டமிட்டுள்ளார். இதனால், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு எதிராக ஒரு ‘மெகா’ கூட்டணியை உருவாக்குவதில் பாஜக மற்றும் பாமக மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருவது உறுதியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின் முடிவில் பாமகவின் நிலைப்பாடு மற்றும் தேர்தல் தொடர்பான கூடுதல் அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்களை ஏற்படுத்தி வரும் இந்தச் சந்திப்பு, பிற கூட்டணிக் கட்சிகளிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: அதிமுக-பாஜக வெற்றிக்கு உழைப்போம்; "தவெக கட்சியே கிடையாது!" – விஜய்யை வெளுத்து வாங்கிய சரத்குமார்! 

இதையும் படிங்க: பியூஷ் கோயல் - இபிஎஸ் சந்திப்பு எதிரொலி: சசிகலா ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share