"விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம்"... மக்கள் மத்தியில் பிரேமலதா விஜயகாந்த் உருக்கம்...!
விஜய பிரபாகரன் கேப்டனின் மறுஉருவம் மட்டுமல்ல, உள்ளத்தாலும் கேப்டனைப் போன்றவர் அவர் கொடுக்கும் வாக்குறுதிகளைக் கட்டாயம் நிறைவேற்றுவார் - பிரேமலதா பேச்சு.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதுநகரில் 2 ம் நாளாக தனது மகன் விஜய பிரபாகரனை ஆதரித்து செங்குன்றாபுரம், எரிச்ச நத்தம் புதுப்பட்டி, வெள்ளூர், ஆனைக்குட்டம் ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: "விருதுநகர் என்பது கர்மவீரர் காமராஜர் பிறந்த பூமி மட்டுமல்ல, நமது கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பூர்வீகமும், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த மண்ணும் இதுவே. இத்தகைய பல்வேறு சிறப்புகளைக் கொண்ட விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன் வெற்றி பெற்றால், உங்களுக்காக அவர் செய்யப்போகும் திட்டங்களை நான் பட்டியலிடுகிறேன்.
விஜய பிரபாகரன் வெற்றி பெற்றவுடன், விருதுநகர் நகராட்சிப் பகுதியிலிருந்து முத்துராமலிங்க நகர் செல்லும் வகையில் கௌசிகா ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் அமைத்துத் தரப்படும். அதேபோல் சிவகாமிபுரம் மற்றும் ரோஜா நகர் பகுதிகளிலும் உயர்மட்டப் பாலங்கள் மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். சத்திரரெட்டிபட்டி மற்றும் கருப்புக்கோட்டை சாலைகளில் புறவழிச்சாலைகள் அமைக்கப்படும். நகராட்சியில் சரக்கு லாரி முனையம் அமைக்கப்பட்டு, சர்வீஸ் சாலைகளின் இருபுறமும் மின்விளக்குகள் வசதி செய்து தரப்படும்.
இதையும் படிங்க: மகனுக்காக களம் இறங்கிய பிரேமலதா..!! விருதுநகரில் சூறாவளி பிரச்சாரம்..!
விருதுநகர் தொகுதியில் குடிநீர் பிரச்சனை மிக முக்கியமாக இருப்பதை நான் அறிவேன். வெற்றி பெற்றவுடன் 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு, அனைவரது குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும். தாகத்தில் தவிக்கும் மக்களுக்குத் தண்ணீர் தருவதே விஜய பிரபாகரனின் தலையாய கடமையாக இருக்கும்.
தொகுதியில் புதிய பேருந்து நிலையம் சீரமைக்கப்படும். மேலும், புதிய பல் மருத்துவமனை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உங்களுக்காக உருவாக்கப்படும். நீண்ட நாள் கோரிக்கையான மாணவர்களுக்கான அறிவுசார் மையங்கள் மற்றும் மழைநீர் வடிகால் திட்டங்கள் முழுமையாகச் செயல்படுத்தப்படும். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பெண்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள் (மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின்) வாங்க 8000 ரூபாய் கூப்பன்கள் வழங்கப்படும். மேலும் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 2,000 உரிமைத் தொகை. மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் மானியம். இளைஞர்களுக்கு ரூ. 1,500 மற்றும் முதியோர்களுக்கு ரூ. 2,000 ஓய்வூதியம். 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்வு. விவசாயிகளுக்கு நெல் மற்றும் கரும்புக்கு உரிய விலை மற்றும் பால் கொள்முதல் விலையில் ரூ. 5 உயர்வு. ஆகியவை அடங்கும்
விஜய பிரபாகரன் படித்தவர், பண்புள்ளவர். அவர் கேப்டனின் மறுஉருவம் மட்டுமல்ல, உள்ளத்தாலும் கேப்டனைப் போன்றவர். அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளை அவர். 'துளசி வாசம் மாறினாலும் தவசி வார்த்தை மாறாது' என்பதற்கேற்ப, அவர் கொடுத்த வாக்குறுதிகளைக் கட்டாயம் நிறைவேற்றுவார்" என்றார்.
இதையும் படிங்க: விருதுநகரில் விஜயபிரபாகரன் தான் ஜெயிப்பார்..!! அடித்துச் சொல்லும் மாணிக்கம் தாகூர்..!!