பிப்., 3-ல் கூட்டணி அறிவிப்பு!! மௌனம் கலைத்தார் பிரேமலதா? திமுக - அதிமுக - தவெக காத்திருப்பு!
இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது தேர்தல் அறிவிப்பதற்கு ஒரு நல்ல முடிவை அறிவிப்போம் என பிரேமலதா கூறினார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செம்பட்டி கிராமத்தில் தேமுதிகவின் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ பிரச்சார ரத யாத்திரை நேற்று மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்டு, அருகிலிருந்த பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்தார்.
நிகழ்ச்சி முடிந்ததும் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அனைத்து பத்திரிக்கையாளர்களும் “யாருடன் கூட்டணி?” என்று தான் கேட்பீர்கள் என்று தொடங்கிய அவர், “அதற்கு நானே பதில் சொல்கிறேன்.
இதையும் படிங்க: திமுகவை டீலில் விட்டு விஜய்க்கு டிக் அடித்த தேமுதிக!! பிரேமலதா சொன்ன முக்கிய மேட்டர்!!
பிப்ரவரி 3ஆம் தேதி சென்னைக்குச் சென்ற பிறகு மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி ஒரு நல்ல முடிவை அதிகாரப்பூர்வமாக தலைமைக் கழகத்திலிருந்து அறிவிப்போம். அதற்குப் பிறகு தேர்தல் பணிகளை தீவிரப்படுத்துவோம். இன்னும் ஒரு மாத காலம் இருக்கிறது. தேர்தல் அறிவிப்பதற்கு ஒரு நல்ல முடிவை அறிவிப்போம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
ஒரு குறிப்பிட்ட தேதி உள்ளதா என்று செய்தியாளர்கள் தொடர்ந்து கேட்டதற்கு, “பிப்ரவரி மாதம் முழுவதும் நேரம் இருக்கிறது. ஒரு நல்ல முடிவு எடுத்து பிப்ரவரி நடுவில் அதற்கான அறிவிப்பை வெளியிடுவோம். யாருக்கு எந்தத் தொகுதி, எத்தனை வேட்பாளர்கள் என்பதையும் முடிவு செய்து அறிவிப்போம். உரிய நேரத்தில் அனைத்து பணிகளையும் செய்வோம்” என்று பதிலளித்தார்.
விஜயபிரபாகர் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, “விஜயபிரபாகர் ஏற்கனவே விருதுநகர் தொகுதியில் எம்பியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் அந்த வெற்றி செல்லாது என்ற தீர்ப்பு வந்துள்ளது. கேப்டன் சொன்னது போல தர்மம் ஜெயிக்கும். அந்த வகையில் அவர் தேர்தலில் போட்டியிடுகிறாரா? இல்லையா? எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார்? என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை. முதலில் யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள் என்பதை உரிய நேரத்தில் முடிவு செய்வோம்” என்று தெளிவுபடுத்தினார்.
எடப்பாடி பழனிசாமி “காலம் கழிந்து வரும் கூட்டணிக்கு எந்த மரியாதையும் இல்லை” என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “அண்ணன் எடப்பாடியாரிடம் தான் இது பற்றி நீங்கள் கேட்க வேண்டும். அவர் கூறிய கருத்தை அவரிடம் தான் கேளுங்கள். அதைப் பற்றி எங்களுக்கு எந்த கருத்தும் இல்லை.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் எங்கள் குழந்தை. ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்து ஒரு சரியான முடிவை நாங்கள் அறிவிப்போம். அது மற்றவர்களுக்கு எப்படித் தெரிகிறது என தெரியவில்லை. நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம்” என்று பதிலளித்தார்.
கூட்டணி அமைந்தால் இரட்டை இலக்க தொகுதிகள் கேட்பீர்களா? வேறு எதிர்பார்ப்புகள் உள்ளதா? என்ற கேள்விக்கு, “ஆட்சி அமைப்பதற்குத் தான் கட்சி ஆரம்பிக்கிறார்கள். அனைவருக்கும் ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. தேமுதிகவிற்கு உரிய இடங்கள் கிடைக்கும். கூட்டணி அமைப்பவர்களிடம் கூட்டணி தர்மத்தோடு செயல்பட்டு அத்தனை தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதுவரை கூட்டணிக்கு யார் உங்களை அழைத்திருக்கிறார்கள் என்று செய்தியாளர் கேட்டதற்கு, “தமிழ்நாட்டிலும் மத்தியிலும் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவிற்கு தோழமைக் கட்சிகள் தான். கேப்டன் குருபூஜைக்கு அத்தனை பேரும் வந்திருந்தார்கள். எல்லோரோடும் நாங்கள் நட்பாகத் தான் இருக்கிறோம். ஆனால் கூட்டணி என்பது உரிய நேரத்தில் நாங்கள் அறிவிப்போம்” என்று தெளிவுபடுத்தினார்.
தவெகவின் இந்த ரத யாத்திரை மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் பேச்சு, 2026 தேர்தலில் தேமுதிக எடுக்கும் முடிவு தமிழக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இதையும் படிங்க: தேமுதிகதான் ஒரே வழி!! பிரேமலதாகிட்ட பேசுங்க!! மு.க.ஸ்டாலினிடம் வழியுறுத்தும் திமுக நிர்வாகிகள்!