“மாணவர்களை நேரில் சந்தியுங்கள்! ஜார்க்கண்ட் போராட்டம்: ஹேமந்த் சோரனுக்கு ராகுல் திடீர் அழுத்தம்!
ஜார்க்கண்ட் அரசு நடத்திய தேர்வில் நடந்த முறைகேட்டைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை சந்தித்து பேசுமாறு முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் கடிதம் எழுதியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் கடிதம் எழுதியுள்ளார். இந்த விவகாரம் ஜார்க்கண்ட் அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா–காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய மூன்று போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அந்தத் தேர்வுகளை ரத்து செய்து, சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மாணவர்களும் இளைஞர்களும் 20 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: “தவறு செய்தது என்டிஏ... தண்டனை மாணவர்களுக்கா?” நெட் மறுதேர்வை கண்டித்து ராகுல் ஆவேசம்!
தேர்வு முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ. அல்லது ஓய்வுபெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தங்களது போராட்டத்துக்கு ராகுல் நேரடியாக ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் மாணவர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இதற்கிடையே, முதல்வர் ஹேமந்த் சோரன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க வேண்டும் என ராகுல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வருவதாகவும், அவர்களின் போராட்டத்துக்கு காங்கிரஸ் முழு ஆதரவு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்க ஜார்க்கண்ட் அரசு மேற்கொண்ட நடவடிக்கையை வரவேற்றுள்ள ராகுல், போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை முதல்வர் நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், நாட்டின் கல்வி அமைப்பு தொடர்பாக மத்திய அரசையும் ராகுல் தனது கடிதத்தில் விமர்சித்துள்ளார். இந்திய கல்வி அமைப்பு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டுக்குள் சென்று, மாணவர்களை ஒடுக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மாணவர் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் நேரடியாக முதல்வருக்கு கடிதம் எழுதியிருப்பது அரசியல் ரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது. மாணவர்களின் கோரிக்கைகளை ஜார்க்கண்ட் அரசு எவ்வாறு கையாளப்போகிறது என்பது அடுத்தகட்டத்தில் முக்கியத்துவம் பெறும்.
இதையும் படிங்க: “ஆதரவை வாபஸ் பெறுங்கள்!” ராகுலுக்கு மாணவர்கள் வைத்த கோரிக்கை... ஹேமந்த் சோரன் அரசுக்கு நெருக்கடி