ராகுல் காந்தி நாளை தமிழகம் வருகிறார்! 3 மாவட்டங்களில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பரப்புரை!
பொன்னேரி, சோளிங்கர், துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம், ராகுல் வருகையை ஒட்டிப் பாதுகாப்புத் தீவிரம்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி நாளை (ஏப்ரல் 18, சனிக்கிழமை) தமிழகத்தில் ஒருநாள் சூறாவளிப் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வரும் அவர், திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்துப் பேசுகிறார்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாளை மறுநாள் சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, காலை 11.10 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்கிறார். சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, காலை 11.30 மணிக்கு, ஹெலிகாப்டரில் புறப்பட்டு, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி செல்கிறார். அங்கு நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு, பொன்னேரி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் துரை சந்திரசேகரை, ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
அதன் பின்பு அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதிக்கு சென்று, அங்கு நடக்கும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு, காங்கிரஸ் வேட்பாளர் முனி ரத்தினத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்பு ராணிப்பேட்டையில் இருந்து, தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, பிற்பகல் 2.30 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்கிறார்.
இதையும் படிங்க: இன்று வெளியாகிறது தவெக வாக்குறுதி புத்தகம்..! நீலாங்கரையிலிருந்து புறப்பட்ட விஜய்..!
அதன்பின்பு சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, மாலை 3 மணிக்கு, தனி விமானத்தில் புறப்பட்டு, திருச்சி செல்கிறார். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் எம். லெனின் பிரசாத்தை ஆதரித்து, பிரச்சாரம் செய்கிறார். அதன்பின்பு ராகுல் காந்தி மீண்டும் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து மாலை 5.40 மணிக்கு, தனி விமானத்தில் புறப்பட்டு, இரவு 8.20 மணிக்கு டெல்லி செல்கிறார்.
ராகுல் காந்தியின் வருகையை ஒட்டி சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களில் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்று சென்னையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், டெல்லியில் இருந்து வந்திருந்த ராகுலின் சிறப்புப் பாதுகாப்பு அதிகாரிகள் (SPG) மற்றும் தமிழகக் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்றுப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசித்தனர்.
இதையும் படிங்க: தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி ! சனிக்கிழமை மூன்று தொகுதிகளில் சூறாவளி பிரச்சாரம்!