பக்தர்கள் மனசு நிறையனும்..! அதிகாரிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவு..!
பக்தர்கள் மனநிறைவோடு கடவுளை தரிசிக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டார்.
தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், துறை அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். பக்தர்கள் நலன், கோயில் சொத்துக்களின் பாதுகாப்பு மற்றும் நிர்வாக சிறப்பு ஆகியவற்றை முன்னிறுத்திய இந்த உத்தரவுகள், துறையின் செயல்பாட்டில் ஒரு புதிய திசையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர் ரமேஷ் தனது உத்தரவில், அறநிலையத்துறை அலுவலர்கள் அனைவரும் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கோயில்கள் என்பவை வெறும் சடங்கு நிகழ்வுகளுக்கான இடங்கள் அல்ல. அவை பக்தர்களின் ஆன்மீக தேவைகளை நிறைவேற்றும் புனிதமான இடங்கள் என்பதை அதிகாரிகள் மனதில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அதிகாரியும் பக்தர்களுடன் பணிவுடனும், பொறுப்புணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
கோயில் சொத்துக்களின் மீட்பு நடவடிக்கை தொய்வின்றி தொடர வேண்டும் என்பதும் அவரது முக்கிய வலியுறுத்தல்களில் ஒன்று. பல கோயில்களின் நிலங்கள், கட்டிடங்கள் மற்றும் பிற சொத்துக்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவற்றை மீட்டெடுப்பதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும். இதற்காக துறை அதிகாரிகள் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: அறநிலையத்துறை அமைச்சரான பிராமணர்... சர்ச்சையான விஜய் முடிவின் பரபரப்பு பின்னணி?
இந்த மீட்பு பணி மூலம் கோயில்களின் பொருளாதார வலிமை அதிகரிக்கும் என்பது அமைச்சரின் நம்பிக்கை. குடமுழுக்கு போன்ற முக்கிய நிகழ்வுகளும் தாமதமின்றி நடைபெற வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். கோயில் நிர்வாகத்தில் குறைபாடுகள் எழாத வகையில் செயல்பட வேண்டும். பக்தர்கள் மனநிறைவோடு தரிசனம் செய்ய வசதி ஏற்படுத்த வேண்டும். கோயில்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பெண்களை இழிவு படுத்துவீங்களா..? திருமாவிடம் ஆ.ராசா மன்னிப்பு கேட்கணும்..! அமைச்சர் ஆதவ் ஆவேசம்..!