இரண்டாக உடைகிறது திரிணாமுல் காங்.,! மகாராஷ்டிரா மாடலை கையில் எடுத்த பாஜக! மம்தா கண்ணீர்!
மஹாராஷ்டிராவில் சிவசேனா கட்சி இரண்டாக உடைந்தது போல, தற்போது மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்., கட்சிக்குள் கிளர்ச்சி வெடித்துள்ளது.
மேற்கு வங்க அரசியலில் புதிய பரபரப்பு உருவாகியுள்ளது. தேர்தல் தோல்வியில் இருந்து மீள முயன்று வரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்குள் தற்போது உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிடாபிரடா பானர்ஜிக்கு ஆதரவாக 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தியதாக கூறப்படுவது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 208 இடங்களில் வெற்றி பெற்று முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் மம்தா பானர்ஜியின் நீண்டகால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த தோல்வியின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், திரிணமுல் காங்கிரஸுக்குள் புதிய சர்ச்சை உருவாகியுள்ளது.
தேர்தல் முடிந்த பிறகு எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற கட்சி கூட்டத்தில், சில எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகள் போலியாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில், சில கையெழுத்துகள் உண்மையானவை அல்ல என்று தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி ரிடாபிரடா பானர்ஜி மற்றும் சந்தீபன் சாஹா ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: 15 ஆண்டுகால மம்தா சாம்ராஜ்யம் சரிந்தது! மேற்கு வங்க முதல்வரை இன்று அறிவிக்கிறது பாஜக!
ஆனால் இந்த நடவடிக்கைக்கு பின்னர் கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. ரிடாபிரடா பானர்ஜியை எதிர்க்கட்சித் தலைவராக முன்னிறுத்தும் முயற்சியில் 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக சில மூத்த நிர்வாகிகளும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
மேலும், திரிணமுல் காங்கிரஸின் சில எம்.பி.க்கள் கட்சியை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகிறது. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், திரிணமுல் காங்கிரஸில் இருந்து வரும் தலைவர்களை பாஜக ஏற்குமா என்ற கேள்விக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க பாஜக தலைவர் சமிக் பட்டாச்சார்யா, “திரிணமுல் தலைவர்களுக்கான கதவுகள் தற்போது மூடப்பட்டுள்ளன. யாருடைய உதவியும் இல்லாமல் மக்கள் ஆதரவால் வெற்றி பெற்றுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனால், திரிணமுல் காங்கிரஸில் உண்மையிலேயே பிளவு ஏற்படுமா அல்லது கட்சி தலைமையால் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்படுமா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: நாங்கள் தோற்கவில்லை!! ராஜினாமா செய்ய மறுத்து அடம் பிடிக்கும் மம்தா பானர்ஜி!!