சபரிமலை பக்தர்களுக்கு அவசர அறிவிப்பு! பம்பையில் வெள்ளப்பெருக்கு! பயணத்தை தவிர்க்க தேவஸ்தானம் வேண்டுகோள்!
சபரிமலையில் நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு நடை திறக்கப்படும் நிலையில், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் பயணத்தை தவிர்க்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெற உள்ள நிறைப்புத்தரிசி பூஜையை முன்னிட்டு இன்று மாலை கோவில் நடை திறக்கப்படவுள்ள நிலையில், கேரளத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாதுகாப்பு கருதி பக்தர்கள் சபரிமலைக்கு வருவதை தற்காலிகமாக தவிர்க்குமாறு திருவிதாங்கூர் தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நாளை நடைபெறவுள்ள நிறைப்புத்தரிசி பூஜைக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை திறக்கப்படுகிறது. வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கனமழையால் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பது பக்தர்களின் பயணத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் பாதைகளில் பாதுகாப்பு சவால்கள் உருவாகியுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேவஸ்தானம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பே முதன்மை என்பதால் தேவையற்ற பயணங்களை தவிர்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: பழைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி! கோவில் டெண்டர்களில் இனி முழு வெளிப்படைத்தன்மை! அமைச்சர் ரமேஷ் அதிரடி!
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றை கடக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே இன்றும், நாளையும் சாமி தரிசனம் செய்ய முன்பதிவு செய்துள்ள பக்தர்கள் தங்களது சபரிமலை பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படும். 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும். மேலும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை கோவில் நடை திறக்கப்படும். இதற்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு தற்போது நடந்து வருகிறது."
கேரளத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சபரிமலைக்கு செல்லத் திட்டமிட்டுள்ள பக்தர்கள் பயணத்திற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை கவனித்து, பாதுகாப்பை கருத்தில் கொண்டு முடிவெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை கோனியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு! பக்தர்கள் காணிக்கையில் கை வைத்த ஊழியர்கள் 8 பேர் சஸ்பெண்ட்!