“திரையில் இருந்து வந்தவன் அல்ல; சிறையில் இருந்து வந்தவன்” - விஜயை மறைமுகமாக சாடிய சீமான்...!
இலவசங்களை நிறுத்திவிட்டு வேலைவாய்ப்புகளை தருவேன் நான் திரையில் இருந்து வந்தவன் அல்ல. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து வந்தவன் தூத்துக்குடி தேர்தல் பரப்புரையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில், வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் தூத்துக்குடி வேட்பாளர் இரா. ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக், திருச்செந்தூர் வேட்பாளர் ஒபிலியா ஸ்ரீவைகுண்டம் வேட்பாளர் சண்முகசுந்தரம், ஓட்டப்பிடாரம் வேட்பாளர் அனுசியா ஆகியோரை ஆதரித்து அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு கேட்டு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தூத்துக்குடி அண்ணா நகரில் திறந்த வேனில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: நாம் தமிழர்கட்சி ஒரு மக்கள் ராணுவம். மானத்திற்காக உயிரையும் கொடுப்போம். கடந்த 15 ஆண்டுகளாக ஒரு மகத்தான கனவை சுமந்து கொண்டு வருகிறோம். இந்த தமிழகத்தில் நமக்கென்று எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
நமது பெண், பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை. கடலுக்குள் மீன் பிடிக்கும் உரிமை கூட இல்லை. 850 மீனவர்கள் இதுவரையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் ராணுவம் குஜராத் மீனவரை கடத்தி செல்லும் போது இந்திய ராணுவம் விரட்டி சென்று அவனை மீட்டுவருகிறது. ஆனால் எத்தனை ஆயிரம் தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்து இருக்கிறது. இந்திய கடற்படை தடுத்து காத்துள்ளதா?. என்னை ஒருமுறை முதல்வர் நாற்காலியில் அமர வைத்து பாருங்கள். யாராவது என் மீனவனை தொட்டால் அவனை தூக்குகிறேன். என் மீனவ மக்களை வைத்து நெய்தல் மீனவ படை கட்டுவேன். நமது கோஸ்ட் கார்டு வெறும் வேஸ்ட் கார்டு ஆகிவிட்டது.
இதையும் படிங்க: குடிப்பவன் மதுப்பிரியன்-னா... கொலை செய்பவன் கொலை பிரியனா..? சீமான் சரமாரி கேள்வி..!
நான் உங்களை மட்டுமே நம்புகிறேன். எத்தனையோ பேர் என்னை கூட்டணிக்கு அழைத்தனர். நான் செல்லவில்லை. நான்குமுறை பொது தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த கட்சி இந்த தேசத்தில் இருக்கிறதா?. அது நாம் தமிழர் கட்சி மட்டுமே. மறுபடியும் களம் கான வந்துள்ளது இந்த கட்சி. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரையில் விடாமுயற்சியுடன் தற்போதும் நிற்கிறது. இது அசைக்க முடியாத நம்பிக்கை. கள் இறக்குவது குற்றமா? அவரை சுட்டது ஏன்? மக்களே அநீதியை எதிர்த்து கிளர்ந்து போராடியது தூத்துக்குடியில் மட்டும்தான்.
அருணா ஜெகதீசன் கமிசன் முன்பு 3 மணி நேரம் சாட்சியம் அளித்தேன். நான் கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் இல்லை. கொட நாடு கொலை சம்பவம் என்ன நடந்தது? யாரும் கண்டு கொள்ளவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவன் தான் நல்ல நிர்வாகி என்றார்.
நான் எல்லா இலவசங்களையும் நிறுத்திவிட்டு அவற்றை வாங்கு சக்தியான வேலை வாய்ப்புகளை தருவேன். திராவிட கட்சிகள் ஒழிக்கப்பட வேண்டியவை. பல ஆயிரம் படகுகளை வாங்கி மீன்களை பிடித்து வர செய்து வருவாய் ஈட்டுவேன். மீன் சந்தைகள் ஏற்படுத்துவேன். அரசே மீன் ஏற்றுமதி செய்யும். இதற்காக நெய்தல் அங்காடி அமைப்பேன்.
உழவர்கள், விதவைகளுக்கு, விவசாயிகளுக்கு பேங்க், தமிழனுக்காக தமிழ்நாடு வங்கி அமைப்பேன். எனது அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்கும். அரசு மக்களுடன் கூட்டு தொழில் தொடங்கும். எல்லா மக்களுக்கும் ஒரு தலைவன் இருந்தான் காமராஜ் என்ற பெயரில், தற்போது பிறந்தான் அவன் பேரன் சீமான் என்று. அவர் கடமையை இவன் செய்து வருகிறான். எனக்குள் இருக்கும் அசாத்திய ஆற்றல் தான் என்னை பேச வைக்கிறது. வாக்கு செலுத்துவதில் நான் என்ன செய்ய வேண்டும் என்று யாரிடமும் கேட்காதே. நீயாக சுயமாக வாக்களி.
பொருளாதாரம் தெரியாதவர்களிடம் நாட்டை கொடுத்விட்டோமே.
பனை, தென்னை, ஈச்சம்பால் உற்பத்தியை தொடங்குவேன். தாய்லாந்துபோல் தென்னங்கருப்பட்டியை உருவாக்க முடியும். நான் அரிதாரத்தை அழித்தவுடன் அதிகாரத்தை தாங்கள் என்று வந்தவன் அல்ல. ஒப்பனையை கலைத்தவுடன் அரியனையை தாருங்கள் என்று வந்தவன் அல்ல. நான் திரையில் இருந்து வந்தவன் அல்ல. ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்து வந்தவன். புரிகிறதா?.
நான் குறிப்புகளோடு பேசுபவன் அல்ல. குறிக்கோளாடு பேசுவன். நான் எதையும் தாளில் இருந்து படிப்பவன் அல்ல. என்தலையில் இருந்து படிப்பவன். கள்ளை தடை செய்பவர்களை நாம் தடை செய்து தோற்கடிக்க வேண்டும். நாம் தமிழர் கட்சி தொடங்கியது நான் அல்ல. நமது தமிழ் தாத்தா சி.பா.ஆதித்தனார். அவர் கட்சியை கலைத்தபோது அவரிடம் நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் வழி வழியாக வரும் வீரத்தமிழ் பிள்ளைகள் இந்த கட்சியை ஏற்று நடத்துவர் என்று தெரிவித்துள்ளார். நான் எங்கிருந்தேன், அவர் எங்கிருந்தார். என்னை நம்பி அவர் விட்டு சென்று உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: எங்கள் வெற்றியை கர்த்தரிடம் ஒப்படைக்கிறேன்..! நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை..!