வங்கதேசம் தான் பிரச்னை! சீனா இல்லை! ஊடுருவல்கள் குறித்து மத்திய அரசு தகவல்!!
2014ம் ஆண்டு முதல் சட்டவிரோதமாக ஊடுருவியவர்கள் 23,926 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச எல்லையில் ஊடுருவல் அதிகம்; சீன எல்லையில் எந்த ஊடுருவல் முயற்சியும் நடக்கவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது
புது டெல்லி: இந்தியாவின் அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவ முயன்றவர்கள் குறித்து லோக்சபாவில் திரிணமுல் காங்கிரஸ் எம்பிக்கள் எழுப்பிய கேள்விக்கு உள்துறை இணையமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.
அதன்படி, 2014ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரை மொத்தம் 20,806 பேர் சட்டவிரோத ஊடுருவல் முயற்சியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு (2025) ஜனவரி முதல் நவம்பர் வரை மேலும் 3,120 பேர் கைதாகியுள்ளதால், மொத்தம் 23,926 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்டை நாடுகளில் இருந்து ஊடுருவல் முயற்சிகள் அதிகமாக இருப்பது வங்கதேச எல்லையில் தான் என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. 2014 முதல் 2024 வரை வங்கதேசத்தில் இருந்து 18,851 பேர் ஊடுருவ முயன்று கைதாகியுள்ளனர்.
இதையும் படிங்க: டெல்லி குண்டுவெடிப்பு விவகாரம்! ஜெகா வாங்கிய நெதன்யாகு! இந்திய பயணம் ரத்து!
2025இல் மட்டும் ஜனவரி முதல் நவம்பர் வரை 2,556 பேர் கைதாகியுள்ளனர். மியான்மரில் இருந்து 1,165 பேரும், பாகிஸ்தானில் இருந்து 556 பேரும் (2025இல் 49 பேர்), நேபாளம்-பூடான் எல்லையில் இருந்து 234 பேரும் கைதாகியுள்ளனர்.
மேற்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் ஊடுருவல் முயற்சிகள் அதிகமாக இருக்கும் நிலையில், வடக்கே சீனாவுடனான எல்லையில் ஒரு ஊடுருவல் முயற்சி கூட பதிவாகவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எல்லை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில், பாகிஸ்தானுடனான எல்லையில் 93 சதவீத பகுதிகளிலும், வங்கதேசத்துடனான எல்லையில் 80 சதவீத பகுதிகளிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை இணையமைச்சர் கூறியுள்ளார்.
இப்புள்ளிவிபரங்கள் இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் வலிமையையும், குறிப்பிட்ட எல்லைகளில் உள்ள சவால்களையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
இதையும் படிங்க: டெல்லி குண்டு வெடிப்பு வழக்கு!! சதிகாரன் உமருக்கு உடந்தை! 7வது நபரை தட்டித் தூக்கிய போலீஸ்!!