×
 

சாராயக் கடைகளை மூடுங்கள்! தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை - சௌமியா அன்புமணி விளாசல்!

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி விமர்சித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ‘தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்’ என்ற சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த எழுச்சிமிகு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகச் சௌமியா அன்புமணி கலந்துகொண்டார். அவரை வரவேற்க 500-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டிருந்தனர். தங்களின் வீட்டுப் பெண்ணாகச் சௌமியா அன்புமணியைக் கருதிய மகளிர், அவருடன் ஆர்வமுடன் செல்ஃபிக்களையும் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.

மேடையில் உரையாற்றிய சௌமியா அன்புமணி, தமிழக அரசின் நிர்வாகத் தோல்விகளை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டார். “பாலாற்றில் ஓடும் தண்ணீரைச் சேமிக்க இந்த அரசாங்கம் எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அண்டை மாநிலங்களான கர்நாடகாவும் ஆந்திராவும் பாலாற்றின் குறுக்கே ஏராளமான தடுப்பணைகளைக் கட்டித் தண்ணீரைத் தேக்கி வைக்கின்றன. ஆனால் தமிழக அரசு அதனை வேடிக்கை பார்க்கிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்திலிருந்து நிர்வாக வசதிக்காக ராணிப்பேட்டை மாவட்டத்தைத் தனியாகப் பிரிக்க வேண்டும் என முதன்முதலில் குரல் கொடுத்துப் போராடியது பாட்டாளி மக்கள் கட்சிதான் என்பதை யாரும் மறக்க முடியாது” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசிய அவர், “இன்றைய தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பதே கிடையாது. அரசு ஆங்காங்கே புதிய சாராயக் கடைகளைத் திறந்து மக்களைச் சீரழித்து வருகிறது. 108 ஆம்புலன்ஸ் என்ற உன்னதமான திட்டத்தைக் கொண்டு வந்து கோடிக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியவர் டாக்டர் அன்புமணி தான். இந்த மாவட்டத்தில் பல ரயில்கள் நின்று செல்லவும் பாமக தான் நடவடிக்கை எடுத்தது. எனவே, உங்கள் வீட்டுப் பெண்ணாக நான் உங்களோடு நிற்கிறேன்; வருகின்ற தேர்தலில் பெண்களாகிய நீங்கள் இந்த ஆட்சிக்கு எதிராக ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம்: இனி வாரத்தில் 2 நாட்கள் முகாம்! அமைச்சர் மா.சு. அறிவிப்பு!


 

இதையும் படிங்க: அரசுப் பேருந்து விபத்துகளைத் தடுக்க அதிரடி நடவடிக்கை! போக்குவரத்துத் துறை புதிய உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share