×
 
☰

ரத்த சகதியில் தமிழ்நாடு..! அராஜகத்துக்கு முடிவில்லையா..? கொந்தளித்த ஸ்டாலின்..!!

தவெக ஆட்சி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும், அரிவாள் வெட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.த.வெ.க. ஆட்சியில் மின்வெட்டை மிஞ்சும் அளவுக்குத் தலைதூக்கும் அரிவாள் வெட்டு சம்பவங்கள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார். சட்டம் ஒழுங்கு சீரழிந்து இரத்தச் சகதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டில் குற்றவாளிகள் தைரியமாகவும் பொதுமக்கள் அச்சத்தோடும் வாழும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் வெளியாகிய அதிர்ச்சிச் செய்திகள் இதற்குச் சான்றாக அமைந்துள்ளன என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.சென்னை மயிலாப்பூரில் 19 வயது இளைஞர் சத்தியசீலன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவர் கூறினார். திருத்தணியில் தனது 17 வயது மகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் மீது காவல்நிலையத்தில் புகாரளித்த தந்தை, அவரது வீட்டின் முன்பே வைத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

சேலத்தில் வீட்டில் தனியாக இருந்த ஜனாபாய் எனும் மூதாட்டி பகலிலேயே கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். கொலையாளிகள் அவரது நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர் என்று அவர் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி காவல் நிலையத்தில் ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டுத் திரும்பும்போதே வீரபத்திரன் என்பவர் மர்ம நபர்களால் மனைவி முன்பு வைத்துச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே மது போதையில் நிர்வாணமாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளார். சோழவந்தானில் டாஸ்மாக் கடை அருகே பைக்கில் வந்த சியாம் சுந்தர்ராஜன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: செவிலியர்கள் தான் இரையா.? முதுகில் குத்தும் தவெக அரசு... ஸ்டாலின் விளாசல்.!!

எண்ணூர் இரயில் நிலையத்திலேயே மாணவர்களை வெட்ட முயற்சி நடந்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.வடக்கு, தெற்கு, மேற்கு, தலைநகர் என எல்லா திசைகளிலும் குற்றச் சம்பவங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன என்று ஸ்டாலின் கூறினார். பட்டப்பகல், நள்ளிரவு எனப் பாகுபாடு இல்லாமல் தமிழ்நாடு இரத்தத்தில் தோய்ந்து போயுள்ளது. வீட்டிலும் பாதுகாப்பில்லை, வெளியிலும் பாதுகாப்பில்லை என்ற நிலையில் மக்கள் பரிதவித்துக் கிடக்கின்றனர் என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.காவல்துறையினரால் ரோந்துப் பணி மேற்கொள்ளப்படுகிறதா இல்லையா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

சிங்கப்பெண் அதிரடிப்படையினர் ரீல்ஸ் போடுவதில் காட்டும் ஆர்வத்தைப் பெண்களின் பாதுகாப்பில் காட்டுவார்களா மாட்டார்களா என்றும் அவர் வினவினார். காவல் நிலையத்தில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் புகார் தெரிவித்தவர்களே கொலைக்கு உள்ளாகும் அராஜகத்துக்கு முடிவு எப்போது என்று கேட்டார். குற்றவாளிகள் கண்காணிக்கப்படுகிறார்களா இல்லையா? கண்காணிப்பு இல்லாமல் போனதைத்தானே திண்டுக்கல் மாவட்டக் கொலைச் சம்பவம் காட்டுகிறது என்று ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.

 

இதையும் படிங்க: விஜயின் ரோடு ஷோ பிளாப்.! ஸ்டாலினின் கூட்டம் டாப்.! நீலிக்கண்ணீர் வடிக்கிறார் விஜய்... அப்பாவு விமர்சனம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share