அதிமுக, தவெக அடிமடியில் கை வைக்கும் ஸ்டாலின்! ஒன் டூ ஒன் சந்திப்பில் கொடுத்த முக்கிய அசைன்மெண்ட்!
'த.வெ.க.,- அ.தி.மு.க., கட்சிகளில் செல்வாக்குள்ள, தேர்தல் பணியாற்றக்கூடிய நிர்வாகிகள் யாரும் இருந்தால் அவர்களை நம் கட்சிக்கு அழைத்து வாருங்கள்' என 'ஒன் டூ ஒன்' சந்திப்பில் தி.மு.க., நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் 'அசைன்மெண்ட்' கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ள நிலையில், தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மதுரையில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் அவர் அறிவித்தபடி, தற்போது ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கட்சி நிர்வாகிகளை அழைத்து ‘ஒன் டூ ஒன்’ சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
இந்தச் சந்திப்புகளில், தொகுதி வாரியாக அரசியல் நிலவரம், வாக்காளர்களின் எண்ணிக்கை, தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு, எதிர்க்கட்சிகளின் பலம் மற்றும் பலவீனம், அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படுகிறது.
சமீபத்தில், சிவகாசி மற்றும் மதுரை தெற்கு தொகுதிகளின் நிர்வாகிகளைச் சந்தித்த ஸ்டாலின், ஒரு முக்கிய உத்தரவை வழங்கியுள்ளார். “உங்கள் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) மற்றும் அ.தி.மு.க.வில் செல்வாக்கு மிக்க, தேர்தல் பணிகளில் திறம்பட செயல்படக்கூடிய நிர்வாகிகள் யாரேனும் இருந்தால், அவர்களை நம் கட்சிக்கு அழைத்து வாருங்கள்” என்று அவர் கூறியுள்ளார். இந்த உத்தரவு, தி.மு.க.வின் தேர்தல் உத்தியில் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு தொகுதிக்கு 3 பொறுப்பாளர்கள்!! அமித்ஷா-வின் மாஸ்டர் ப்ளான்! தமிழகத்தை கைப்பற்ற களமிறங்கும் பாஜக!
தி.மு.க.வினர் கூறுவதாவது: 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளில் 200-ஐ கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் கட்சி களமிறங்கியுள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதியின் அரசியல் பாரம்பரியம், ஸ்டாலினின் தலைமை, கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட நலத்திட்டங்கள், மற்றும் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் பலம் ஆகியவற்றை முதன்மைப்படுத்தி தி.மு.க. தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அதேநேரம், எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வுக்கு குறிப்பிடத்தக்க கூட்டணிக் கட்சிகள் இல்லாதது தி.மு.க.வுக்கு சாதகமாக உள்ளது.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் அரசியல் வரவு, அவருக்கு இளைஞர்கள் மத்தியில் கிடைத்து வரும் பெரும் ஆதரவு ஆகியவை தி.மு.க.வுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக, கரூரில் நடந்த த.வெ.க.வின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம், அக்கட்சியின் செல்வாக்கை எடுத்துக்காட்டியது.
மேலும், பா.ஜ.க. த.வெ.க.வை தங்கள் கூட்டணிக்கு இழுக்க முயற்சிப்பதாகவும், அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. இடையே ஒரு கூட்டணி உருவாகலாம் என்ற அச்சமும் தி.மு.க.வை அச்சுறுத்துகிறது. இதனால், தி.மு.க.வின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், வி.சி. போன்ற கட்சிகளிடையே சிறு தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், எதிர்க்கட்சிகளில் செல்வாக்கு மிக்க நிர்வாகிகளை தி.மு.க.வுக்கு இழுத்து, தொகுதி வாரியாக தங்கள் பலத்தை அதிகரிக்க வேண்டும் என்ற உத்தியை ஸ்டாலின் முன்வைத்துள்ளார். “நிச்சயமாக, செல்வாக்கு மிக்க நிர்வாகிகளை தி.மு.க.வுக்கு இழுத்து வருவோம். இது எங்கள் தேர்தல் வெற்றிக்கு முக்கியமானது” என்று தி.மு.க. நிர்வாகிகள் உறுதியுடன் தெரிவித்துள்ளனர். இந்த உத்தி, தமிழக அரசியல் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திமுக - தவெக இடையில் ரகசிய டீலிங்! சாயம் வெளுத்திருச்சு! திடீர் ட்விஸ்ட் அடிக்கும் திருமா!