சுருக்குமடி வலை... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!! சுப்ரீம் கோர்ட் முக்கிய முடிவு..!!
சுருக்குமடி வலை தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பான நீண்டகால சட்டப் போராட்டத்தில் உச்ச நீதிமன்றம் முக்கிய தலையீடு செய்துள்ளது. தமிழ்நாடு அரசு 2000 ஆம் ஆண்டு தனது கடல் எல்லைக்குள் அதாவது 12 கடல் மைல் வரை இந்த வலையைப் பயன்படுத்துவதைத் தடை செய்திருந்தது. பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கடல் வளம் குறைவதாகவும் கூறி இந்தத் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடையை எதிர்த்து மீனவர்கள் அமைப்புகள் உயர் நீதிமன்றத்திலும் பின்னர் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தன. உச்ச நீதிமன்றம் இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், அனைத்து தரப்பினரின் நலனையும் பாதுகாக்கும் வகையில் இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதன்படி தமிழ்நாட்டின் 12 கடல் மைல் எல்லைக்கு அப்பால் உள்ள மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பொருளாதார மண்டலத்தில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த அனுமதி கடுமையான நிபந்தனைகளுடன் வழங்கப்பட்டது.
பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே இந்த வலையைப் பயன்படுத்த முடியும். மத்திய சட்டம் மற்றும் மாநில விதிகளின்படி பதிவு செய்யப்பட்ட படகுகளுக்கு மட்டுமே அனுமதி. ஒவ்வொரு படகிலும் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அந்தக் கருவி மீன் பிடிக்கும் நேரம் முழுவதும் இயங்க வேண்டும். வாரத்தில் திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்களில் மட்டுமே இந்த வலையைப் பயன்படுத்தலாம். காலை எட்டு மணிக்குப் பிறகு கடலுக்குச் சென்று அதே நாள் மாலை ஆறு மணிக்குள் திரும்ப வேண்டும். மற்ற மீன் பிடிப்பு தடை நாட்களும் பொருந்தும். இந்த நிபந்தனைகள் மீன் வளத்தைப் பாதுகாப்பதற்கும் பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும் விதிக்கப்பட்டவை.
இதையும் படிங்க: நீட் போராட்ட மாணவர் வழக்குகள் ரத்து! உச்சநீதிமன்றம் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு!
சுருக்குமடி வலை அதிக அளவில் மீன்களைப் பிடிக்கும் தன்மை கொண்டது. அதனால் சிறிய மீன்கள் மற்றும் கடல் உயிரினங்களும் சிக்கி அழியும் வாய்ப்பு உள்ளது. அதேநேரம் இந்த வலையைப் பயன்படுத்தும் மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகின்றனர். இரு தரப்பினரின் நலனையும் சமநிலைப்படுத்தும் வகையில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது. வழக்குகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தன. நிபுணர் குழுவின் அறிக்கைகள் மற்றும் மத்திய அரசின் நிலைப்பாடு ஆகியவை பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் உச்ச நீதிமன்றம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தொடர்புடைய வழக்குகளை முடித்து வைத்தது. தீர்ப்பின் முழு நகல் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: மாணவர் போராட்ட FIR-களை ரத்து செய்ய மத்திய அரசு மனு! உச்சநீதிமன்றத்தில் நாளை அவசர விசாரணை!