×
 

சட்டசபையில் சர்ச்சை பேச்சு! நேரலை ஒளிபரப்பில் புதிய மாற்றம்! லைவ் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய முடிவு!

வழக்கமாக காலை தொடங்கும் கூட்டத்தொடர் பிற்பகல் வரை நடைபெறும் நிலையில், தற்போது சில நாட்களில் இரவு நேரத்தையும் தாண்டி விவாதங்கள் நீடிக்கின்றன.

சென்னை: தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பும்போது, இனி சில நிமிடங்கள் தாமதமாக ஒளிபரப்பும் நடைமுறையை கொண்டுவர சட்டசபை செயலகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், நடப்பு வாரத்திலேயே புதிய நடைமுறை அமலுக்கு வர வாய்ப்புள்ளதாகவும் சட்டசபை செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விவாதங்களின்போது எம்.எல்.ஏ.க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகின்றனர்.

அப்போது ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே அரசியல் ரீதியான கருத்து மோதல்கள் ஏற்படுவதால், அவ்வப்போது சபையில் சலசலப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, சில விவாதங்களின்போது சர்ச்சைக்குரிய வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதாகவும், அவற்றை சபைக்குறிப்பில் இருந்து நீக்க சபாநாயகர் உத்தரவிடுவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தகாத வார்த்தைகள் பேசுகிறார்கள்! அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா? மாஜிக்களை வெளுத்து வாங்கிய அமைச்சர் ரமேஷ்!

ஆனால், சட்டசபை நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுவதால், சபைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் வார்த்தைகளும் ஒளிபரப்பில் இடம்பெற்று விடுகின்றன. பின்னர் அவை சமூக வலைதளங்களில் குறும்படங்கள் மற்றும் ரீல்ஸ் வடிவில் வேகமாகப் பரவுகின்றன. இதனால் தேவையற்ற அரசியல் சர்ச்சைகள் உருவாக வாய்ப்புள்ளதாக ஆளும் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவதில் 5 முதல் 15 நிமிடங்கள் வரை தாமதத்தை ஏற்படுத்தும் திட்டம் பரிசீலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சபாநாயகர் நீக்க உத்தரவிடும் சர்ச்சைக்குரிய பகுதிகளை பொதுமக்கள் பார்க்கும் நேரலை ஒளிபரப்பில் இருந்து தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சட்டசபை காலை 9.30 மணிக்கு தொடங்கி, மாலை வரை நடைபெறும் நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. பல்வேறு யூடியூப் சேனல்களும் இந்தக் காட்சிகளை மறுஒளிபரப்பு செய்து வருகின்றன. இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

இதற்கிடையே, சட்டசபை கூட்டம் நீண்ட நேரம் நடைபெறுவது குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வழக்கமாக காலை தொடங்கும் கூட்டத்தொடர் பிற்பகல் வரை நடைபெறும் நிலையில், தற்போது சில நாட்களில் இரவு நேரத்தையும் தாண்டி விவாதங்கள் நீடிக்கின்றன.

கடந்த 25-ம் தேதி இரவு 7.15 மணி வரை, இடைவேளையின்றி சுமார் 10 மணி நேரம் சட்டசபை கூட்டம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால் மூத்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ள உறுப்பினர்கள் சோர்வடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நீண்ட நேர சட்டசபை கூட்டம் குறித்த காட்சிகளை நேரலையில் பார்த்த பொதுமக்களில் சிலர், “கின்னஸ் சாதனைக்காக சட்டசபை நடத்தப்படுகிறதா?” என சமூக வலைதளங்களில் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒருபுறம் சட்டசபை நேரலைக்கு தாமதம் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருப்பதும், மறுபுறம் கூட்டத்தொடர் நீண்ட நேரம் நடைபெறுவதும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. புதிய நேரலை நடைமுறை எப்போது முதல் அமலுக்கு வருகிறது என்பதே தற்போது எதிர்பார்ப்பாக உள்ளது.

இதையும் படிங்க: “கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி!” திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி! சட்டசபையில் கலகல!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share