×
 

தமிழக காங்கிரஸில் மாவட்ட தலைவர் தேர்வு சர்ச்சை! மேலிட பார்வையாளர்களுக்கு ‘பண மழை’! பட்டியல் வெளியீடு தாமதம்?

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் தேர்தலில், மேலிட பார்வையாளர்களை பண மழையில் நனைய வைத்துள்ளதால், தேர்வு பட்டியல் வெளியாகுமா அல்லது கிடப்பில் போடப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் வரும் 2026 சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி அமைப்பு ரீதியாக வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக 77 மாவட்ட தலைவர்களைத் தேர்வு செய்ய டில்லி மேலிடம் 38 பேர் கொண்ட மேலிட பார்வையாளர்கள் குழுவை அமைத்தது. இந்தக் குழு மாவட்ட வாரியாக ஆய்வு செய்து தகுதியான நிர்வாகிகள் பட்டியலைத் தயாரித்து ஒப்படைத்தது.

பல ஆண்டுகளாக பதவியில் இருக்கும் சில முன்னாள் தலைவர்களையும் கோஷ்டி ஆதரவாளர்களையும் நீக்கி, தேர்தலுக்கு ஏற்ற வகையில் வேகமாகச் செயல்படக்கூடியவர்களை மாவட்ட தலைவர்களாக நியமிக்க மேலிடம் திட்டமிட்டிருந்தது. இதனால் புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சில மாவட்டங்களில் மேலிட பார்வையாளர்களை சில எம்.எல்.ஏ.க்களும் மாநில நிர்வாகிகளும் பணம் கொடுத்து ‘கவனித்ததால்’ பட்டியல் வெளியீடு தாமதமாகிறது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: அம்மஞ்சல்லிக்கு பிரயோஜனம் இல்ல! காங்கிரசை கண்டுக்காத விஜய்!! பீகார் முடிவால் பின்வாங்கல்!

தங்கள் ஆதரவாளர்களுக்கு மாவட்ட தலைவர் பதவி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தப் ‘பண மழை’ பொழிவு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் பட்டியல் வெளியானால் அதிருப்தியாளர்கள் மாற்றுக் கட்சிக்குச் செல்ல வாய்ப்புள்ளது என்று ஒரு தரப்பு அஞ்சுகிறது. எனவே சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகே பட்டியலை வெளியிடலாம் என்று மற்றொரு தரப்பு விரும்புகிறது. இதுகுறித்து டில்லி மேலிடம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களும் புதியவர்களும் மாவட்டப் பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இந்தச் சர்ச்சை கட்சிக்குள் புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது கட்சியின் ஒற்றுமையைப் பாதிக்கலாம் என்ற அச்சமும் வெளிப்படையாகப் பேசப்படுகிறது.

இதையும் படிங்க: ஜி.கே.மணி தொகுதியில் அன்புமணி போட்டி?! மல்லுக்கட்டும் தொண்டர்கள்!! பாமக-வில் மோதல் உச்சக்கட்டம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share