×
 

'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரால் 1979ல் துவக்கப்பட்ட தோட்டக்கலைத்துறை தனது தனித்துவத்தை இழந்து வருகிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் 1979-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை, தற்போது தனது தனித்துவத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக துறை அலுவலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். நிர்வாக மாற்றங்கள் காரணமாக துறையின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து முதல்வர் ஜோசப் விஜய் நேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூறியதாவது, கடந்த ஆட்சிக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் 2.0 (UADT 2.0)' அமல்படுத்தப்பட்டதன் பின்னர், தோட்டக்கலைத்துறையின் தனித்துவமான நிர்வாக அமைப்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டபோது, வேளாண்துறை உயரதிகாரிகள் மற்றும் அந்தத் துறையைச் சேர்ந்த சங்கங்களின் கருத்துகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும், தோட்டக்கலைத்துறையின் கருத்துகள் போதிய அளவில் பரிசீலிக்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதையும் படிங்க: காவிரி பேச்சுவார்த்தைக்காக கர்நாடகம் செல்லும் முதல்வர் விஜய்... உடன் செல்லும் 13 பேர் யார்? வெளியான முழு விவரம்!

முன்னதாக, கிராமங்களில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் வணிகம் ஆகிய துறைகளுக்கென தனித்தனி அலுவலர்கள் செயல்பட்டு வந்தனர். தற்போது 'வேளாண் விரிவாக்க அலுவலர்கள்' என்ற ஒரே அமைப்பின் கீழ் அனைத்து துறைகளின் பணிகளையும் ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக, தோட்டக்கலை தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைகள் விவசாயிகளிடம் முழுமையாக சென்று சேரவில்லை என்றும், ஒரே அதிகாரி பல துறைகளின் பொறுப்புகளை கவனிப்பதால் பணிச்சுமை அதிகரித்துள்ளதாகவும் அலுவலர்கள் கூறுகின்றனர். மேலும், நான்கு வெவ்வேறு துறை அதிகாரிகளுக்கு தனித்தனியாக அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

தோட்டக்கலை, பழத்தோட்டம், மலர்சாகுபடி மற்றும் காய்கறி உற்பத்தி போன்ற துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த அதிகாரிகள் நேரடியாக செயல்பட்டால்தான் விவசாயிகளுக்கு முழுமையான பலன் கிடைக்கும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். எனவே, களத்தில் பணியாற்றும் அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் தோட்டக்கலை மாணவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, துறையின் தனித்துவத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திருச்சியில் திடீரென மோசமான வானிலை! திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்! பயணிகள் அவதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share