×
 

பத்திரப்பதிவுக்கு டோக்கன் வாங்கினீங்களா? இனி 12 மணி வரை காத்திருக்க வேண்டும்? வெளியான அதிர்ச்சி தகவல்!

ஆன்லைன் பத்திரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் தவறில்லை என்றாலும், நேரில் வந்து டோக்கன் பெறும் பொதுமக்களின் காத்திருப்பு நேரத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகளை மேலும் எளிமையாக்கும் வகையில் ஆன்லைன் நடைமுறைகள் விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், நேரடியாக சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்று டோக்கன் பெறும் பொதுமக்களுக்கு காத்திருப்பு நேரம் அதிகரிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆன்லைனில் தாக்கல் செய்யப்படும் பத்திரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

பத்திரப்பதிவு பணிகளை படிப்படியாக ஆன்லைன் முறைக்கு மாற்றும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பதிவுத்துறை சார்பில் ‘ஸ்டார் 3.0’ மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் கீழ் வீடு மற்றும் மனை வாங்குவதற்கான பத்திரங்களை சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் செல்லாமல் பதிவு செய்யும் வசதி கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி அறிமுகமானது. இந்த நடைமுறைக்கு பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக, வீட்டுக்கடன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் அடமான ஆவணங்கள் மற்றும் கடன் முடிவடைந்த பிறகு மேற்கொள்ளப்படும் ரசீது ஆவணங்களையும் நேரில் செல்லாமல் பதிவு செய்யும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை நாளை முதல் கட்டாயமாக்கப்படுவதாக பதிவுத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: வீடு, மனை பத்திரப்பதிவு இனி ஆன்லைனில்!! சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டாம்! புதிய நடைமுறை முழு விவரம்!

ஆன்லைனில் பொதுமக்கள் தாக்கல் செய்யும் பத்திரங்களுக்கு 24 மணி நேரத்துக்குள் சார்-பதிவாளர்கள் ஒப்புதல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அலுவலகத்துக்கு வந்ததும் முதலில் ஆன்லைன் விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நேரடியாக பத்திரப்பதிவு செய்ய டோக்கன் பெற்று வரும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் பதிவு முடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் பெறப்படும் டோக்கன் நடைமுறையால் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றும் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் பத்திரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் தவறில்லை என்றாலும், நேரில் வந்து டோக்கன் பெறும் பொதுமக்களின் காத்திருப்பு நேரத்தையும் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து சார்-பதிவாளர் ஒருவர் கூறுகையில், ஆன்லைனில் தாக்கல் செய்யப்பட்ட பத்திரங்களை முதலில் முடித்த பிறகே நேரடியாக வரும் பத்திரங்களை பதிவு செய்யும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே, அதிகாரிகள் விரும்பினாலும் இந்த வரிசையை மாற்ற முடியாது என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு? திடீரென குறைந்த காற்றாலை மின் உற்பத்தி... பின்னணி என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share