ரேஷன் அரிசியில் ரூ.10.82 கோடி முறைகேடு? 6,000 டன் பழைய அரிசி சிக்கியது; 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்!
நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்ததாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அரிசியில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. புதிதாக அரைக்கப்பட்ட அரிசிக்கு பதிலாக, அரிசி ஆலை உரிமையாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து சுமார் 6,000 டன் பழைய அரிசியை வழங்கியதாக எழுந்த புகாரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளுக்கு வழங்குவதற்காக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் தனியார் அரிசி ஆலைகளுக்கு நெல் அரைப்பதற்காக வழங்கப்படுகிறது. அந்த நெல்லை அரைத்து பெறப்படும் புதிய அரிசியே அரசின் தானியக் கிடங்குகளில் சேமிக்கப்பட்டு, பின்னர் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட வேண்டும்.
ஆனால், இந்த நடைமுறையில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் நாளை அண்ணாமலை தலைமையில் பிரமாண்ட பேரணி! வீ த லீடர்ஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் அரிசி அரைக்கும் முகவர்களாக செயல்பட்டு வந்த நான்கு தனியார் அரிசி ஆலைகள், தங்களுக்கு வழங்கப்பட்ட நெல்லில் இருந்து புதிதாக அரைக்கப்பட்ட அரிசியை வழங்குவதற்கு பதிலாக, சுமார் ரூ.10.82 கோடி மதிப்புள்ள 6,000 டன் பழைய அரிசியை வழங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், நெல்லில் இருந்து புதிதாக பெறப்பட்ட அரிசி தனியார் சந்தைக்கு திருப்பிவிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அரிசி ஆலைகளில் இருந்து பெறப்படும் அரிசியின் தரத்தை ஆய்வு செய்து, அவற்றை கிடங்குகளில் சேமிக்க அனுமதிக்கும் பொறுப்பு அதிகாரிகளிடம் இருந்தது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட ஆலை உரிமையாளர்களுடன் அதிகாரிகள் கூட்டுச் சேர்ந்து பழைய அரிசியை கிடங்குகளில் சேமிக்க அனுமதித்ததாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் மற்றும் தரக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மேலும் முறைகேட்டில் தொடர்புடையதாக கூறப்படும் நான்கு அரிசி ஆலைகளின் ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்பட்டு, அவை கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த முறைகேடு 2025-26 காரீப் சந்தைப்படுத்தல் பருவத்தில் மே முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் நடைபெற்றதாக கூறப்படுகிறது. மேலும், இந்த முறைகேடு காஞ்சிபுரத்தைத் தாண்டி வேறு மாவட்டங்களிலும் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் அரிசி விநியோகத்தில் பொதுமக்களின் நலனுக்காக அரசு மேற்கொள்ளும் கொள்முதல் மற்றும் அரவை நடைமுறையிலேயே முறைகேடு நடந்திருந்தால், அதன் முழு பின்னணியும் வெளிச்சத்துக்கு வர வேண்டியது அவசியம். 6,000 டன் அரிசி எங்கு சென்றது, புதிய அரிசி உண்மையில் தனியார் சந்தைக்கு திருப்பிவிடப்பட்டதா, மேலும் இதில் எத்தனை பேர் தொடர்புடையவர்கள் என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.
இதையும் படிங்க: “தினமும் 1 டிஎம்சி திறங்க!” கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு அதிரடி பரிந்துரை