×
 
☰

தூசு தட்டப்படும் மணல் கொள்ளை விவகாரம்! திமுக ஆட்சியில் ரூ.4730 கோடி இழப்பு! விசாரணை தீவிரம்!

செயற்கைக்கோள் படங்கள், ஜியோ ஸ்கேனிங், ட்ரோன் ஆய்வுகள் மற்றும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் ஜி.பி.எஸ். தரவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

தமிழகத்தில் கடந்த ஆட்சிக் காலத்தில் செயல்பட்ட 28 ஆற்று மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணல் அள்ளப்பட்டதாக எழுந்துள்ள ரூ.4,730 கோடி மதிப்பிலான முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை ஏற்கனவே மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது மாநில விசாரணை அமைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட 28 மணல் குவாரிகளில் மணல் அள்ளுவதற்கான அனுமதி சில ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ‘தோழி’ மகளிர் விடுதி! சமூக நலத்துறை - பொதுப்பணித்துறை இடையே புதிய சர்ச்சை! தமிழக அரசு துறைகளுக்குள் புதிய விவாதம்!

இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், கரிகாலன் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தினம் ஆகியோர் தொடர்புடையதாக விசாரணை அமைப்புகளின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட அளவை மீறி மணல் அள்ளப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அமலாக்கத்துறை முன்னதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், குவாரிகளில் உண்மையில் எவ்வளவு மணல் அள்ளப்பட்டது என்பதை கண்டறிய தொழில்நுட்ப ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செயற்கைக்கோள் படங்கள், ஜியோ ஸ்கேனிங், ட்ரோன் ஆய்வுகள் மற்றும் மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களின் ஜி.பி.எஸ். தரவுகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில், அரசு பதிவுகளில் குறிப்பிடப்பட்ட அளவை விட அதிகமாக, சுமார் 27.70 லட்சம் யூனிட் மணல் அகழப்பட்டதாகவும், அதன் மதிப்பு சுமார் ரூ.4,730 கோடி என கணக்கிடப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தொகை தொடர்பான குற்றச்சாட்டு தற்போது விசாரணையில் உள்ளதே தவிர, இறுதியாக நீதிமன்றத்தால் நிரூபிக்கப்பட்டதாக கருத முடியாது.

இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அமலாக்கத்துறை தமிழக காவல்துறை தலைமைக்கு ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்ததாக கூறப்படுகிறது. தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அந்த ஆவணங்கள் மற்றும் புகார்களின் அடிப்படையில் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதுடன், குவாரிகள் செயல்பட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: தீபாவளிக்கு முன் அரிசி விலை ரூ.100ஐ தாண்டும்? ஆந்திரா, தெலுங்கானா நெல் மூட்டைகளுக்கு வந்த புதிய சிக்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share