அறநிலையத் துறைக்கு செக் வைத்த தகவல் ஆணையம்! கோவில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மைக்கு உத்தரவு!
கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், காலி மனைகள், வணிகக் கட்டடங்கள், குடியிருப்புகள், குத்தகைதாரர்கள் மற்றும் வாடகை நிலுவை போன்ற விவரங்கள் வெளியிடப்பட வேண்டும்.
சென்னை: தமிழகத்தில் உள்ள கோவில்களின் சொத்துக்கள், வாடகை விவரங்கள், நிர்வாக செயல்பாடுகள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை பொதுமக்கள் அறியும் வகையில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என மாநில தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தகவல்கள் கோவில் இணையதளங்களிலும், அறிவிப்பு பலகைகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்றும், இதற்காக 90 நாட்கள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை மந்தைவெளிப்பாக்கத்தைச் சேர்ந்த ரவிசங்கர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை கோரி விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பான விசாரணையை மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி மேற்கொண்டார். விசாரணையின் முடிவில், பொதுமக்களுக்கு கோவில் நிர்வாகம் தொடர்பான தகவல்கள் எளிதில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, கோவிலுக்கு சொந்தமான விவசாய நிலங்கள், காலி மனைகள், வணிகக் கட்டடங்கள், குடியிருப்புகள், குத்தகைதாரர்கள் மற்றும் வாடகை நிலுவை போன்ற விவரங்கள் வெளியிடப்பட வேண்டும். அதேபோல் கோவிலின் வங்கி வைப்பு நிதி, சேமிப்பு கணக்குகள் மற்றும் உபயதாரர்கள் வழங்கிய நன்கொடைகள் தொடர்பான தகவல்களும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: திருப்பதி போல தமிழக கோவில்களிலும் புதிய நடைமுறை? அமைச்சர் ரமேஷ் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
மேலும், அர்ச்சகர்கள் மற்றும் நிரந்தர, தற்காலிக பணியாளர்களின் விவரங்கள், சேவை கட்டணங்கள், வரவு-செலவு கணக்குகள், தணிக்கை அறிக்கைகள், அறங்காவலர் குழு தீர்மானங்கள் ஆகியவையும் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறநிலையத் துறையின் அரசாணைகள், சுற்றறிக்கைகள் மற்றும் உயரதிகாரிகளின் உத்தரவுகளுடன், கோவில் நடை திறக்கும் நேரம், பூஜை காலங்கள், திருவிழாக்கள், ஸ்தல வரலாறு உள்ளிட்ட தகவல்களையும் அறிவிப்பு பலகைகள் அல்லது பதாகைகள் மூலம் பொதுமக்கள் அறியும் வகையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை செயல்படுத்தியதற்கான ஆவணங்களுடன், அறநிலையத் துறை பொதுத் தகவல் அலுவலரும் இணை ஆணையருமான தங்கம், நவம்பர் 30ம் தேதி மாநில தகவல் ஆணையத்தில் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள்!’ அமைச்சர் அதிரடி! அறநிலையத்துறைக்கு பக்தர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!