×
 

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை! மீனவர்களுக்கு சூறாவளி காற்று எச்சரிக்கை!

தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல தாழ்வு பாதை காரணமாக அடுத்த சில நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் நிலவும் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை (Trough) காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில தினங்களுக்கு இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையின் ஒருசில இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அரியலூர் மாவட்டம் செந்துறையில் 93 மில்லிமீட்டர் (9 செ.மீ) மழை பதிவாகியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 9 செ.மீ மழையும், பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிகாட்டில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இன்று (11-08-2026) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், நாமக்கல் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: சென்னை உட்பட 21 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

நாளை மற்றும் நாளை மறுநாள் (12-08-2026 & 13-08-2026) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை தொடரும்.

14-08-2026 சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, விழுப்புரம், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

15-08-2026 முதல் 17-08-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாகத் திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் 39.9° செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சமவெளிப்பகுதிகளில் குறைந்தபட்சமாக நிலவிய கோயம்புத்தூர் விமான நிலையத்தில் 23.2° செல்சியஸும், மலைப்பகுதியான கொடைக்கானலில் 12.4° செல்சியஸும் பதிவாகியுள்ளது. வட உள் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை சற்று அதிகமாகக் காணப்படலாம்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-37° செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

குமரிக்கடல், தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, தென்மேற்கு மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share