இனி டாஸ்மாக் மதுபானம் வாங்க ஆன்லைன் போதும்! நாளை முதல் புதிய சேவை!!
சென்னையில் இருந்தபடியே திருநெல்வேலி உள்ளிட்ட தொலைதூரக் கடைகளிலும் ஆர்டர் செய்ய முடியும்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் நீண்ட வரிசையில் நின்று மதுபானம் வாங்கும் அவலம் இனி வரலாறாக மாற வாய்ப்புள்ளது. நாளை (வியாழன்) முதல் மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களில் ஆன்லைன் முன்பதிவு முறை அமலுக்கு வருகிறது. ரெயில்டெல் குழுமம் உருவாக்கிய Tasmace2e.in என்ற புதிய இணையதளம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பிராண்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.
இந்த அமைப்பில் முதலில் உள்நுழைந்து, தங்கள் வயது 21 அல்லது அதற்கு மேல் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பின்னர் 5 கி.மீ. அல்லது 25 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள கடைகள், கடை எண் அல்லது மாவட்டம் அடிப்படையில் தேடலாம். பிடித்த மதுபானத்தைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனில் பணம் செலுத்தினால் உடனடியாக QR கோடு உருவாகும். இந்த QR கோட்டை 21 வயதுக்கு மேற்பட்ட எவரும் கடைக்கு எடுத்துச் சென்று காட்டினால், எம்.ஆர்.பி. விலையிலேயே மதுபானத்தைப் பெற்றுக்கொள்ளலாம். சென்னையில் இருந்தபடியே திருநெல்வேலி உள்ளிட்ட தொலைதூரக் கடைகளிலும் ஆர்டர் செய்ய முடியும்.
இருப்பு விவரங்கள் ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் புதுப்பிக்கப்படும். தேர்ந்தெடுத்த பொருள் கிடைக்காவிட்டால் பணம் திரும்ப வழங்கப்படும் அல்லது வேறு கடையில் வாங்கும் வசதி உண்டு. இணையதளம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இயங்கும். ஒவ்வொரு மதுபானத்தின் எம்.ஆர்.பி. விலை, சப்ளையர் விவரங்கள் மற்றும் கடைக்குச் செல்லும் வழிகாட்டியும் கிடைக்கும். இதன் மூலம் அதிக விலை வசூல் மற்றும் குறிப்பிட்ட பிராண்டுகளை மட்டும் தள்ளுபடி செய்யும் நடைமுறை கட்டுப்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: "டாஸ்மாக் முறைகேடு வழக்கு" - ஜாமீனில் வந்த செந்தில் பாலாஜியின் கூட்டாளிகள் கார்த்திக், ரமேஷ் மீண்டும் கைது!
மாவட்ட அதிகாரிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சில தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படலாம் என்றாலும், காலப்போக்கில் சரிசெய்யப்படும். மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் ஆன்லைன் வாங்கிய மதுபானம் வீட்டுக்கு டெலிவரி செய்யப்படும் நிலையில், தமிழகத்தில் சுயமாகப் பெற்றுக்கொள்ளும் முறை அறிமுகமாகிறது.
மதுவிலக்கு கோரும் குரல்கள் இருக்கும் நிலையில் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு எழ வாய்ப்புள்ளது. ஆயினும், வாடிக்கையாளர்களுக்கு வசதியையும் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஆகஸ்ட் 4-ல் உண்ணாவிரதம்... டாஸ்மாக் தனியார்மய முடிவுக்கு எதிராக ஊழியர்கள் போராட்டம்!