"தாய்மாமன் தங்க மோதிர திட்டம்"..! மதுரைக்கு கிளம்பிய CM... களைகட்டிய தூங்கா நகரம்..! !
தாய் மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக முதல்வர் விஜய் மதுரைக்கு புறப்பட்டார்.
தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த முக்கிய நலத்திட்டத்தின் தொடக்க விழாவை முன்னிட்டு முதலமைச்சர் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து காலையில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரை நோக்கி பயணம் மேற்கொண்டார். மதுரை விமான நிலையத்தில் இறங்கிய பிறகு அவர் நேரடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செல்ல உள்ளார்.
முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு மதுரை நகரம் முழுவதும் பெரும் உற்சாகம் நிலவுகிறது. சாலைகள் சுத்தம் செய்யப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்திலிருந்து மருத்துவமனை வரையிலான வழித்தடங்களில் கடுமையான பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. நகரம் முழுவதும் கொடிகள் மற்றும் வரவேற்பு பதாகைகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தமிழக அரசின் முக்கிய நலத்திட்டங்களில் ஒன்றாகும். அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் எடையுள்ள 22 காரட் தங்க மோதிரம் வழங்குவதே இதன் நோக்கமாகும்.
தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு இந்த பயன் கிடைக்கும். PICME அமைப்பில் பதிவு செய்து RCH அடையாள எண் பெற்ற தாய்மார்கள் மட்டுமே தகுதியுடையவர்கள். ஜூன் 22, 2026 முதல் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள்.தமிழக பண்பாட்டில் தாய்மாமன் குழந்தைக்கு சீர் வழங்கும் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசே தாய்மாமன் போல் செயல்பட்டு புதிதாகப் பிறந்த குழந்தையை வரவேற்கும் அடையாளமாக தங்க மோதிரத்தை வழங்குகிறது. அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிப்பதும், தாய்சேய் நலனை மேம்படுத்துவதும் இதன் மற்றொரு நோக்கமாகும்.
இதையும் படிங்க: மதுரை குலுங்க... குலுங்க... அதிரடி விடப்போகும் விஜய்... சி.எம்.யின் இன்றைய ஒட்டுமொத்த பிளான் இதுதான்...!
ஆண்டுதோறும் சுமார் 755.83 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மோதிரத்திலும் தனித்துவமான வரிசை எண் பொறிக்கப்பட்டு பாதுகாப்பான பேக்கேஜிங்கில் வழங்கப்படும்.இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் விஜய் சுமார் 30 குழந்தைகளுக்கு நேரடியாக தங்க மோதிரங்களை அணிவித்து திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து மாநிலம் முழுவதும் 107 மையங்களில் தினசரி நூறு குழந்தைகள் வீதம் மோதிரங்கள் வழங்கப்படும். இடைத்தேர்தல் நடைபெறும் சில தொகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் உடனடியாக திட்டம் செயல்படுத்தப்படும்.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!