×
 

180 சீட்டு ஜெயிச்சிருக்கணும்! தோத்ததே இவரால தான்! செல்வப்பெருந்தகைக்கு எதிராக போர்க்கொடி!

'தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து, செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும்' என, அக்கட்சியின் நிர்வாகிகள், 42 பேர் கையெழுத்திட்ட கடிதம், டில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள காங்கிரஸ் கட்சியில் தற்போது உள்கட்சி அதிருப்தி வெடித்துள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 42 நிர்வாகிகள் கையெழுத்திட்ட கடிதம் டில்லி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் நிர்வாகிகள் எம்.ஜோதி, பொன்கிருஷ்ணமூர்த்தி, கே.விஜயன், தணிகாசலம், அருள் பெத்தையா, எஸ்.வி.ரமணி, ரங்கபாஷ்யம், திருச்சி வேலுச்சாமி, செங்கம் குமார் உள்ளிட்ட 42 பேர் இணைந்து இந்த கடிதத்தை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த கடிதத்தில், “நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக உழைத்த தொண்டர்களின் எதிர்பார்ப்பை இந்த தேர்தல் நிறைவேற்றும் என நம்பினோம். ஆனால் இறுதியில் வெறும் ஐந்து எம்எல்ஏக்கள் மட்டுமே கிடைத்துள்ளன. இதற்கான பொறுப்பை யார் ஏற்கப் போகிறார்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தவெகவை ஆட்சியமைக்க அழைக்காவிட்டால் மாபெரும் போராட்டம்.! மாணவர் காங்கிரஸ் எச்சரிக்கை..!

மேலும், தமிழக அரசியல் சூழ்நிலையை சரியாக மதிப்பிடாமல் தவறான தகவல்கள் வழங்கப்பட்டதாகவும், திமுக ஆதிக்கத்தில் செயல்பட்டதாலேயே காங்கிரஸ் மிகப்பெரிய வாய்ப்பை இழந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தவெக தரப்பில் ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் மற்றும் அதிகார பங்கீடு குறித்து அழைப்பு வந்தபோதும், அந்த கூட்டணியை நிராகரிக்க சிலர் மேலிடத்தை வற்புறுத்தியதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

“தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தால் 180 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்போம்” என்றும், தேர்தல் முடிவுக்குப் பிறகும் உண்மை நிலையை மறைப்பது கட்சிக்கே துரோகம் செய்வதாக இருக்கும் என்றும் அந்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கட்சியில் உடனடி சீர்திருத்தம் தேவை என்றும், ஜாதி மற்றும் மத அரசியலை தாண்டிய புதிய தலைமையை உருவாக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டணி அமைப்பதில் தோல்வி, தொகுதி பங்கீட்டில் தோல்வி மற்றும் அரசியல் முடிவுகளில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த கடிதம் வெளியாகியுள்ளதால் தமிழக காங்கிரஸ் கட்சியில் அடுத்தகட்டமாக பெரிய மாற்றங்கள் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

 

இதையும் படிங்க: விஜய் தலைமையில்தான் ஆட்சி! அது உறுதி! காங்கிரசில் அமைச்சர் பதவி யாருக்கு?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share