மின்சார வாகனங்களுக்கு தொடரும் மவுசு; 100% வரி விலக்கை 2027 வரை நீட்டித்து தமிழக அரசு அதிரடி!
கடந்த 2025-ஆம் ஆண்டில் தமிழகத்தில் புதிய வாகனப் பதிவுகள் முந்தைய ஆண்டைக் காட்டிலும் 8.4 சதவீதம் அதிகரித்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளன.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் 'வாஹன்' (Vahan) இணையதளத் தரவுகளின்படி, கடந்த ஆண்டில் மட்டும் தமிழகம் முழுவதும் மொத்தம் 21,18,489 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 6 முக்கிய மாவட்டங்கள் மட்டும் 40 சதவீதப் பங்களிப்பை அளித்துள்ளன. குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எலக்ட்ரிக் வாகனங்களுக்கு (EV) வழங்கப்படும் 100% சாலை வரி விலக்கை வரும் 2027 டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு புத்தாண்டு பரிசாக அறிவித்துள்ளது. இந்த அதிரடிச் சலுகை வரும் ஆண்டுகளில் மின்சார வாகன விற்பனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் வாகன விற்பனை ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 'வாஹன்' இணையதளப் புள்ளிவிவரங்களின்படி, 21.18 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன; இது 2024-ஆம் ஆண்டுடன் (19.53 லட்சம்) ஒப்பிடுகையில் 8.44 சதவீத வளர்ச்சியாகும். பெட்ரோல் வாகனங்கள் தொடர்ந்து 75 சதவீதப் பங்குடன் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், எலக்ட்ரிக் வாகனங்களின் (EV) வருகை மிக வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த 2024-ல் 1.35 லட்சமாக இருந்த மின்சார வாகனப் பதிவுகள், 2025-ல் 1.74 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இருசக்கர வாகனப் பிரிவில் மின்சார வாகனங்களின் ஊடுருவல் 7.8 சதவீதத்தை எட்டியுள்ளது.
வாகனப் பதிவுகளை மாவட்ட வாரியாகப் பார்க்கும்போது, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கோவை, மதுரை மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்கள் அதிகப்படியான பங்களிப்பைத் தந்துள்ளன. தாம்பரம் மற்றும் பூந்தமல்லி போன்ற புறநகர் பகுதிகளில் மட்டும் 50,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவாகியுள்ளன. அதே சமயம், ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள 11 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (RTOs) பதிவுகள் 5,000-க்கும் குறைவாகவே உள்ளன. ஒட்டுமொத்தப் பதிவுகளில் சுமார் 16.4 லட்சம் வாகனங்கள் இருசக்கரப் பிரிவைச் சேர்ந்தவை என்பதால், சாதாரண மக்களின் வாகனத் தேவை சீராக அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.
இதையும் படிங்க: “முழு கரும்பு.. பச்சரிசி.. சர்க்கரை!” 2026 பொங்கலுக்கு அரசு தரும் ‘ஸ்வீட்’ கிஃப்ட்! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!
தமிழக அரசின் மின்சார வாகனக் கொள்கையின் கீழ், பேட்டரியால் இயங்கும் அனைத்து வாகனங்களுக்கும் 100 சதவீத சாலை வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சலுகை 2025 டிசம்பர் 31-டன் முடிவடைய இருந்த நிலையில், வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று அதனை 2027 டிசம்பர் 31 வரை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு அரசு நீட்டித்துள்ளது. ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த நீட்டிப்பு, போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அல்லாத (Transport & Non-transport) ஆகிய இரு வகை மின்சார வாகனங்களுக்கும் பொருந்தும். இந்தச் சலுகை மூலம் வாகன வாங்குவோரின் சுமை குறைவதோடு, தமிழகம் ஒரு சிறந்த 'ஈவி ஹப்' (EV Hub) ஆக மாறும் எனத் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: டோல்கேட்டுகளில் இலவசம்; சாலை வரியில் விலக்கு - தனியார் பேருந்து துறையை காக்க முதல்வருக்கு வேண்டுகோள்!