×
 

இந்து சமய அறநிலையத்துறை விரிவாக்கம்: புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் நியமனம்!

இந்து சமய அறநிலையத் துறையில் சென்னை, திருச்சி மண்டலங்களை உருவாக்கி 2 புதிய ஐ.ஏ.எஸ். கூடுதல் ஆணையர் பணியிடங்களை அமைத்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தைச் சுமுகமாகவும் திறம்படவும் செயல்படுத்தும் நோக்கில், துறையில் இரு புதிய ஐ.ஏ.எஸ். (IAS Senior Scale) தரத்திலான கூடுதல் ஆணையர் பணியிடங்களை உருவாக்கித் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அரசாணையை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு வணிக வரிகள், பதிவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணையின்படி, அறநிலையத்துறை நிர்வாகம் இரண்டு பிரதான மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வட மாவட்டங்களை உள்ளடக்கிச் சென்னை தலைமையிடமாகக் கொண்ட ‘வட மண்டலம்’ மற்றும் தென் மாவட்டங்களை உள்ளடக்கித் திருச்சி தலைமையிடமாகக் கொண்ட ‘தென் மண்டலம்’ என இரு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாக எல்லைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னை கூடுதல் ஆணையரின் கீழ் சென்னை 1, 2, 3 மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட வட மற்றும் மேற்கு மாவட்டங்களின் இணை ஆணையர் மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் திருச்சி கூடுதல் ஆணையரின் கீழ் திருப்பூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மத்திய மற்றும் தென் மாவட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கரூர் அரசு பணி ரத்து விவகாரம்: நாளை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு திட்டம்!

புதிதாக நியமிக்கப்படும் இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குச் சொத்துகள் மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்தல், முதுநிலை அல்லாத திருக்கோயில்களின் வரவு-செலவுத் திட்ட ஒப்புதல் (Budget Approval), ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான குத்தகை மற்றும் ஏல ஒப்புதல்கள், பாலாயனம் மற்றும் கும்பாபிஷேக அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியக் கூடுதல் அதிகாரங்கள் மற்றும் கடமைகள் வழங்கப்பட்டுள்ளன. அறநிலையத்துறையின் கோயில் சொத்துகளைப் பாதுகாக்கவும், கோயில் நிர்வாகப் பணிகளை விரைவுபடுத்தவும் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை ஆன்மீக அன்பர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: "காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் புதிய நியமனம்" - அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் சேர்ப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share