தனியார் பேருந்துகளுக்கு மானியம் வழங்குக! செப். 29 நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் அறிவிப்பு!
தனியார் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கு மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள வெற்றிப் பயணத் திட்டத்தின் கீழ் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணிப்பது போல், தனியார் பேருந்துகளிலும் பெண்கள், திருநங்கையர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கி, அதற்குரிய இழப்பீட்டு மானியத்தைத் தனியார் பேருந்துகளுக்கும் அரசு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதியன்று தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகத் தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனம் அதிரடியாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் தங்கராஜ், தனியார் பேருந்து உரிமையாளர்களின் இக்கட்டான வாழ்வாதாரப் பிரச்சனைகளை அக்குவேறு ஆணிவேறாகப் புட்டுப்புட்டு வைத்தார்.
தனியார் பேருந்துத் துறையினர் கடந்த 104 வருட பாரம்பரிய வரலாற்றோடு தமிழகத்தில் 1,300 நகரப் பேருந்துகளையும், 3,700 புறநகர்ப் பேருந்துகளையும், 2,000 உபரி மற்றும் உதவிப் பேருந்துகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 7,000 பேருந்துகளை அர்ப்பணிப்புடன் இயக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: ஸ்ட்ரைக் எதிரொலி.. அவசரப் பணிகளை உடனே முடிங்க..!! இந்தியன் வங்கி அறிவுறுத்தல்!!
அரசுத் தரப்பில் கடந்த 54 வருடங்களாகப் படிப்படியாகப் பேருந்துகளின் எண்ணிக்கையை உயர்த்தி, தற்போது சுமார் 19,000 அரசுப் பேருந்துகள் முழு வீச்சில் இயக்கப்பட்டு வருவதையும் அவர் தனது பேச்சில் பதிவு செய்தார்.
இத்தகைய சூழலில், தமிழக அரசு அண்மையில் அறிவித்துள்ள 'வெற்றிப் பயணத் திட்டத்தின்' கீழ் மாநகர, நகர மற்றும் சாதாரண புறநகர் அரசுப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி இலவசமாகப் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திடீர் அறிவிப்பின் எதிரொலியாக, அரசுப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அலைமோதும் வேளையில், தனியார் பேருந்துகளில் பெண் பயணிகள் முற்றிலுமாக வராததால் கூட்டம் குறைந்து, தனியார் பேருந்துகள் அனைத்தும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி நஷ்டத்தில் முடங்கும் விளிம்பிற்குத் தள்ளப்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்தார்.
தினசரி இயக்கச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் தனியார் பேருந்துகளை நிறுத்தும் துர்ப்பாக்கிய நிலை உருவானால், இத்தொழிலையே முழுமையாக நம்பி வாழும் சுமார் 3 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என எச்சரித்தார்.
எனவே, வெற்றிப் பயணத் திட்டத்தில் மாநகர, நகர மற்றும் சாதாரண புறநகர்ப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கப் பொருளாதார அடிப்படையில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள ஏழை எளிய பெண்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அரசுக்குச் சம்மேளனம் சார்பாக அவர் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.
அதேசமயம், தனியார் பேருந்துகளிலும் பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளை முழுமையாக இலவசமாகப் பயணிக்க அனுமதிக்கத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், அதற்குரிய இழப்பீட்டுத் தொகையை அரசு தனியார் பேருந்துகளுக்கும் மானியமாக வழங்க வேண்டும் எனவும் தங்கராஜ் திட்டவட்டமாக வலியுறுத்தினார்.
மேலும் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க மாற்று யோசனை ஒன்றை முன்வைத்த அவர், பெண்களின் அடையாள அட்டை மற்றும் பயோமெட்ரிக் அமைப்பைப் பயன்படுத்திப் பிரத்யேக 'வெற்றிப் பயண இலவச அட்டை' வழங்கி, அதன் மூலம் இலவசப் பயணத்தை முறைப்படுத்தினால் வெளிமாநிலப் பயணிகள் மற்றும் வசதி படைத்தவர்கள் இதைப் பயன்படுத்துவதைத் தடுத்து அரசுப் பொக்கிஷத்தைக் காப்பாற்றலாம் என்றார்.
இக்கோரிக்கைகளை உடனடியாகப் பரிசீலித்துத் தங்களின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும், வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணி முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி நள்ளிரவு 12:00 மணி வரை ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டமாகத் தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் இயங்காது எனத் தங்கராஜ் அறிவித்தார்.
இதையும் படிங்க: அக்டோபர் 6 முதல் நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம்! வங்கி ஊழியர் சங்கம் எச்சரிக்கை!