ஈரான் போருக்கு எண்ட் கார்டு? டிரம்ப் தயாரிக்கும் ரகசிய திட்டம்! அமெரிக்க ஊடகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
ஈரான் உடனான போரில் இருந்து வெளியேறுவதற்கு அதிபர் டிரம்ப் வழிதேடி வருவதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.
ஈரான் போரில் இருந்து வெளியேற டிரம்ப் ரெடி? அமெரிக்க ஊடகம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
ஈரானுடனான மோதலில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான திட்டத்தை அதிபர் டொனால்டு டிரம்ப் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஊடகம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் முழுமையாக திறக்கப்பட்டால், போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவித்துவிட்டு மோதலில் இருந்து விலக டிரம்ப் தயாராகி வருவதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் மேற்கொண்ட தாக்குதல்களால் மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கு பதிலடியாக ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதாக கூறப்படுகிறது. உலகின் முக்கிய கச்சா எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான இந்த கடல்வழி முடங்கியதால், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் தொடர்பான கவலை அதிகரித்துள்ளது.
ஈரான் அணு ஆயுதம் உருவாக்கக்கூடாது என்பது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. ஆனால், தங்கள் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்கானது என ஈரான் தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே நீடித்து வரும் மோதலுக்கு உடனடி தீர்வு ஏற்படவில்லை.
இதையும் படிங்க: அமெரிக்க குடியுரிமை பெற ‘பிரசவ சுற்றுலா’? முட்டுக்கட்டை போட்டார் டிரம்ப்! வெளியானது 2 புதிய உத்தரவுகள்!
இதற்கிடையே, பாகிஸ்தான் மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு தாக்குதல் குறைந்திருந்தாலும், பின்னர் மீண்டும் பதற்றம் அதிகரித்தது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்திய நிலையில், ஈரான் அதனை ஏற்கவில்லை.
இந்த சூழலில், ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறி டிரம்ப் அமெரிக்காவின் தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், ஈரான் தரப்பில் இருந்து பேச்சுவார்த்தை குறித்த தகவல்கள் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிவாயு விநியோக பாதிப்பு குறித்த அச்சம் பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், போரில் இருந்து அமெரிக்காவை வெளியேற்றுவதற்கான திட்டங்களை டிரம்ப் பல வாரங்களாக ஆலோசித்து வருவதாக அமெரிக்க ஊடக செய்தி கூறுகிறது. ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்பட்டால், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்த முயற்சியை கைவிட்டு, போரில் அமெரிக்கா வெற்றி பெற்றதாக அறிவிக்கும் வாய்ப்பை டிரம்ப் பரிசீலிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதிலும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க வேண்டுமெனில், பெருமளவு நிதி வழங்க வேண்டும், அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும், அரபு நாடுகளில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்ற வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், டிரம்ப் உண்மையில் போரில் இருந்து பின்வாங்குவாரா அல்லது புதிய ஒப்பந்தம் மூலம் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிப்பாரா என்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஈரான் மக்களை கொல்ல விரும்பவில்லை! போர் ரத்து... ஒப்பந்தம் ஓகே? டிரம்ப் வெளியிட்ட பரபரப்பு தகவல்!