அமெரிக்காவில் டீசல் விலை கிடுகிடு உயர்வு! ஜெலன்ஸ்கிக்கு டிரம்ப் போட்ட அதிரடி கண்டிஷன்!
உக்ரைனின் தாக்குதல்கள் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, சர்வதேச பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் டீசல் உற்பத்தி மையங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை உக்ரைன் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு அவர் பகிரங்கமாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் டீசல் விலை ஒரு கேலனுக்கு 6 டாலரை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ள சூழலில் டிரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. அயர்லாந்தில் உள்ள தனது டூன்பெக் கோல்ப் கிளப்பில் நடைபெற்ற ‘ஐரிஷ் ஓபன்’ போட்டியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் உக்ரைன் விவகாரம் குறித்து பேசினார்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் சமீபத்தில் பேசியதாகவும், அதன்பின்னர் ஜெலன்ஸ்கியிடமும் இந்த விவகாரம் குறித்து பேசியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். ரஷ்யாவில் டீசல் உற்பத்தியை பாதிக்கும் வகையிலான தாக்குதல்களை உக்ரைன் உடனடியாக கைவிட வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!
உக்ரைனுக்கு தாக்குதல் நடத்த ஏராளமான ராணுவ இலக்குகள் இருப்பதாக குறிப்பிட்ட டிரம்ப், அவற்றில் வேறு இலக்குகளை தேர்வு செய்யலாம் என்றும், ஆனால் டீசல் உற்பத்தி நிலையங்களை குறிவைக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார்.
உக்ரைனின் தாக்குதல்கள் உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி, சர்வதேச பொருளாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக உக்ரைன் ராணுவம் ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக ரஷ்யாவில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், டீசல் ஏற்றுமதிக்கு அந்நாடு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தால் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சர்வதேச சந்தையில் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு அரசியல் ரீதியாகவும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், ரஷ்ய எண்ணெய் உற்பத்தி மையங்கள் மீதான உக்ரைன் தாக்குதல்களுக்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: “இவர்கள் இனி வேலை செய்ய முடியாது...” - ஹெச்-4 விசாவுக்கு புதிய கட்டுப்பாடுகள் ... இந்தியர்கள் தலையில் இறங்கியது பேரிடி...!