லீக்கேஜ் அடைப்போம்னு சொன்னாங்க... ஆனா கடனை ஏத்திட்டாங்க! தவெக பட்ஜெட்டை விளாசிய தங்கம் தென்னரசு!
தவெக அரசின் முதல் பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாகவும், கடன் சுமை ₹20 லட்சம் கோடியாக உயரும் என்றும் தங்கம் தென்னரசு சாடியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் வரவு செலவுத் திட்டம் (பட்ஜெட்) மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலுமாகப் பொய்த்துப் போகச் செய்துள்ளது; 5 ஆண்டுகள் முடியும் போது மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன் ₹20 லட்சம் கோடியாக உயரும் என்று திமுக மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான தங்கம் தென்னரசு கடும் விமர்சனம் செய்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்த செய்தி விவரங்கள் பின்வருமாறு:
தவெக அரசு பொறுப்பேற்ற 3 மாதங்களில் ₹22,000 கோடி கடன் வாங்கியுள்ள நிலையில், இந்த நிதியாண்டில் ₹1.22 லட்சம் கோடி நிகர கடன் வாங்கப்பட உள்ளது. 'கடன் வாங்குவதைத் தவிர்க்க முடியாது' என நிதித்துறை செயலாளரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தவெக அரசு 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்போது மாநிலத்தின் கடன் ₹20 லட்சம் கோடியாக உயரும். திமுக ஆட்சியை விட இந்த ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ₹7,000 கோடி அதிகரித்து மோசமான நிதி மேலாண்மை நிலவுவதைப் பட்ஜெட் காட்டுகிறது.
திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களுக்கு முலாம் பூசப்பட்டு வேறு பெயர்களில் கொண்டு வரப்பட்டுள்ளதே தவிர, புதிய தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இல்லை. திமுக அரசு மூலதனச் செலவுகளையே செய்யாதது போல வெள்ளையறிக்கையில் பிம்பத்தைக் கட்டமைத்தார்கள். ஆனால் திமுகவின் இடைக்கால பட்ஜெட்டை விடத் தற்போதைய பட்ஜெட்டில் மூலதனச் செலவில் ₹3,000 கோடி குறைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நதிகள் இணைப்பு..!! "வரலாற்றுத் திட்டம்"..! முதல்வர் விஜயை புகழ்ந்து தள்ளிய C. விஜயபாஸ்கர்..!
பள்ளிக் கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறைக்கு அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. தொல்லியல் துறைக்கு வெறும் ₹1 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப் போவதாகக் கூறியவர்கள், அதற்கான சாத்தியக்கூறுகளைக் கண்டறிய மட்டுமே சொற்பத் தொகையை ஒதுக்கியுள்ளனர்.
மகளிர் உரிமைத்தொகை ₹2,500 உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதி உள்ளிட்ட எந்த முக்கிய அறிவிப்பும் இடம் பெறாததால், இப் பட்ஜெட் ஒட்டுமொத்தமாக ஏமாற்றம் அளிப்பதாகத் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ஆன்லைன் முன்பதிவு திட்டம் ஆபத்தானது! அன்புமணி இராமதாஸ் கண்டனம்!