விஜய் நிகழ்ச்சி..! மலை பாதையை அடைக்க போலீஸ் முடிவு..! முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்..!
தவெக நிகழ்ச்சி நடக்க இருப்பதால் சீல நாயக்கன்பட்டி மலை பாதையை மூட போலீஸ் முடிவு செய்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி பகுதி தற்போது தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கலந்துகொள்ளும் நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சி அங்கு நடைபெறவுள்ளது. இது கழகத்தின் தேர்தல் பணிகளில் மிக முக்கியமான ஒரு கட்டமாக பார்க்கப்படுகிறது. இந்நிகழ்ச்சி சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் திடல் அல்லது KVP கார்டன் உள்வளாகத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் பொதுமக்கள் சந்திப்பு கூட்டமாக திட்டமிடப்பட்டிருந்தாலும், பின்னர் காவல்துறையின் வழிகாட்டுதல்களின்படி மாற்றம் செய்யப்பட்டு, கழக நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால், QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு பெற்ற 4998 நிர்வாகிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று கட்சித் தலைமை தெளிவாக அறிவித்துள்ளது. முன்னேற்பாடுகள் கடந்த சில நாட்களாகவே தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கழகத்தின் உயர்மட்ட நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் தளத்தில் ஆய்வு செய்து, ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். பந்தல், இருக்கைகள், ஒலி அமைப்பு, பாதுகாப்பு ஏற்பாடுகள் என அனைத்தும் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகின்றன. காவல்துறையின் அனுமதி பெறப்பட்ட பின்னர், பல்வேறு நிபந்தனைகளுடன் நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைத்துள்ளது. கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் தொடர்ந்து வெளியிடும் அறிவிப்புகளில், அனுமதிச் சீட்டு இல்லாதவர்கள் நேரில் வரக்கூடாது என்று கண்டிப்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சேலத்தில் விஜய் பிரச்சாரத்திற்கு ரெட் சிக்னல் காட்டிய போலீஸ்..!! வெளியான அதிரடி காரணம்..!!
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை சேலம் மாவட்ட காவல் துணை ஆணையர் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஐந்தாயிரம் பேர் பங்கேற்கும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டு இருப்பதாகவும் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையிலிருந்து நிகழ்ச்சி நடக்கும் தொடருக்கு வரும் பாதையை அடைக்க போலீசார் முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மலைப்பாதை வழியாக அனுமதியின்றி தொண்டர்கள் குவியலாம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனுமதியின்றி மஞ்சுவிரட்டு…! பறிபோன உயிர்கள்..! சோகத்தில் முடிந்த கொண்டாட்டம்..!