ஓட்டுப்போடுவதை வீடியோ எடுத்து இன்ஸ்டா ரீல்ஸ் போட்ட தவெக நிர்வாகி கைது... என்ன தண்டனை தெரியுமா?
தவெகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்களித்ததை வீடியோ எடுத்திருக்கிறார்.
திருப்பத்தூர் தொகுதியில் வாக்களித்ததை வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். தவெகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்களித்ததை வீடியோ எடுத்திருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வாக்குச் சாவடிக்குள் செல்போன், கேமரா அல்லது எந்தவிதமான மின்னணு சாதனங்களையும் எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் நீங்கள் யாருக்கு வாக்களிக்கிறீர்கள் என்பது ரகசியமாக வைக்கப்பட வேண்டும். வாக்கு இயந்திரத்தின்முன்போ அல்லது வாக்களித்த உடனே எந்திரத்தின் முன் மை வைக்கப்பட்ட விரலுடனோ வாக்குச் சாவடிக்கு உள்ளே நின்று செல்ஃபி எடுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்த விதியை மீறி புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டால், தேர்தல் நடத்தை விதிகளின்படி உங்கள் வாக்கு ரத்து செய்யப்படலாம் என்பதோடு, சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதனை முன்கூட்டியே அதிகாரப்பூர்வ அறிவித்திருந்த தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஓட்டு போடுவதை செல்போனில் வீடியோவோ, போட்டோவோ எடுத்தால் 3 மாதம் வரை சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என எச்சரித்திருந்தது.
இதையும் படிங்க: சிக்கித் தவிக்கும் வாக்காளர்கள்..! வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கணும்..! விஜய் வலியுறுத்தல்..!!
இந்நிலையில், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் சென்ற வாக்காளர் ஒருவர் தான் வாக்களிப்பதை வீடியோவாக எடுத்து பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் டாக்டர். திருப்பதி என்பவர் தற்போது போட்டியிட்டுகிறார். இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு தெரியாமல் வாக்குச்சாவடி மையத்திற்குள் தவெகவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தனது செல்போனை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று தனது வாக்கினை பதிவு செய்வதை வீடியோவாக எடுத்து பதிவிட்டிருந்தார். அதாவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்தில் ஓட்டுப்போடுவதை பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு திமுக சார்பில் புகார் அனுப்பப்பட்டது, புகாரின் பெயரில் தேர்தல் ஆணையம் உடனடியாக யார் அந்த நபர் என்ற குறித்த விவரங்களை சேகரித்தனர். அப்போது சேகரிக்கும் போது குனிச்சி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இவர் தனது செல்போனை எடுத்துக்கொண்டு உள்ளே சென்று அந்த வாக்குச்சாவடி மையத்திற்குள் வீடியோ எடுத்தது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.
உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சியாமளா தேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, சக்திவேலை கந்திலி பகுதியில் உள்ள குனிச்சி என்ற ஊரில் வைத்து தற்போது கைது செய்துள்ளனர். தேர்தல் ஆணைத்தின் விதியை மீறி வீடியோ எடுத்த காரணத்தினால் இவருக்கு அதிகப்படியான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நம் வாக்கு - நம் உரிமை! 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி தமிழக வெற்றி கழகம் வேண்டுகோள்!