சட்டம் ஒழுங்கு பாதிப்பு... காவலர் நியமனம் ஏன் தாமதம்..? உதயநிதி ஸ்டாலின் கேள்வி..!!
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பை சுட்டிக்காட்டி உதயநிதி ஸ்டாலின் விமர்சித்தார்.
2026 ஆம் ஆண்டுக்கான காவலர் ஆட்சேர்ப்பை 2027ஆம் ஆண்டுக்கு தள்ளி வைத்திருப்பதாக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பாணை, காவல்துறை பணியில் இணைய எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. காவல்துறையில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடும், லட்சியத்தோடும், பல ஆண்டுகளாக இரவு, பகலாக மனதளவிலும், உடலளவிலும் லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், தவெக அரசின் இந்த ஆட்சேர்ப்பு தள்ளி வைப்பு நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிய அரசு அமைந்தது முதலே குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில், முன்பை விட கூடுதலாக தற்போது காவலர்கள் தேவைப்படுகிறார்கள் என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் நடப்பாண்டுக்கான காவலர்கள் நியமனத்தை இன்னும் ஓராண்டுக்கு இந்த அரசு தள்ளி வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.
சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பின்படி அடுத்த ஆண்டுதான் காவலர்கள் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது என்று கூறினார். இது, காவல்துறை பணிக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஏற்கெனவே சீர்கெட்டுக் கிடக்கும் சட்டம் ஒழுங்கையும், காவல்துறை பணியின் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்களின் எதிர்காலத்தையும் தமிழக வெற்றிக் கழக அரசு ஒருசேர கேள்விக்குறியாக்கி இருக்கிறது என குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: "வாத்தி ரெய்டு"..! கொட்டும் மழையில் சமூக நீதி விடுதியில் முதல்வர் விஜய் அதிரடி ஆய்வு..!
எனவே, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு ஆணையம் தற்போது வெளியிட்டிருக்கும் அட்டவணையை உடனடியாக திரும்பப் பெற்று, நடப்பு ஆண்டிலேயே காவலர்களை நியமிப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டுமென்று வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: நானே பதிவு செஞ்சுட்டேன், நீங்க ரெடியா? மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து முதல்வர் விஜய் ட்வீட்!